• 0
    Total
    Views

சங்கீதம் 13: கர்த்தர் நம்மைக் கைவிட்டார், மறந்துவிட்டார் என்கிற ஆதங்கம்

Weekly Prayer [Tamil] – 25 SEP 20

Transcript

விசுவாச வாழ்க்கை – 24

ஆபிரகாமின் விசுவாசம் – அழைப்பு # 2 (27.01.2019)

விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்(எபிரெயர் 11:8).

கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ(ஆதியாகமம் 12:1).

கடந்த பல வாரங்களாக எபிரெயர் 11-ஆம் அதிகாரத்திலிருந்து விசுவாச வாழ்க்கையை குறித்து போதித்து வருகிறோம். இதில் முதல் மூன்று வசனங்கள், விசுவாசம் என்றால் என்ன, விசுவாசம் எப்படி செயல்படுகிறது என்பதை குறித்து போதிக்கிறது. அதன் பிறகு ஆசிரியர் மூன்று பழைய ஏற்பாட்டு நபர்களை எடுத்து, அவர்களின் மூலமாக விசுவாசத்தைப் போதிக்கிறார். விசுவாசம் பல்வேறு காரியங்களில் எப்படி வேலை செய்கிறது, குறிப்பாக இரட்சிப்பிலும், கிறிஸ்தவ வாழ்க்கையிலும், உலகத்திற்கு முன்பாக கிறிஸ்தவன் கொடுக்கும் சாட்சியிலும் விசுவாசம் எப்படி வேலை செய்கிறது என்பதைக் குறித்து அங்கே போதிக்கிறார். முதலில் ஆபேலைப் பற்றியும் (வசனம் 4), பிறகு ஏனோக்கைப் பற்றியும் (வசனம் 5, 6), பிறகு நோவாவைப் பற்றியும் (வசனம் 7) சொல்லுகிறார். ஆபேலை வைத்து இரட்சிப்பைக் குறித்தும், ஏனோக்கை வைத்து கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்தும், நோவாவை வைத்து சாட்சியாக இருப்பது பற்றியும் பார்த்தோம். 

கடந்த வாரம் 8-ஆம் வசனத்திற்கு வந்தோம். இதில் விசுவாசத்தைக் குறித்து இன்னும் அதிகமான விவரங்களைக் கொடுக்கும்படியாக ஆரம்பிக்கிறார். அதில் முதலில் ஆபிரகாம் என்கிற மனுஷனை வைத்து இங்கு சில காரியங்களைக் கூறுகிறார். இனி விசுவாசத்தைப் பற்றி அநேக விவரங்கள் கொடுக்கப்படும். விசுவாச வாழ்க்கை என்றால் என்ன என்பதை பல்வேறு கோணத்திலிருந்து பார்த்து, அதன்பின் இனி நாம் சொல்லப்போகிறவர்கள் எப்படி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார்கள், எப்படி அந்த பிரச்சனைகளின் மீது ஜெயத்தைப் பெற்றார்கள், எப்படி தேவனுடைய கிருபையும், இவர்களுக்குள் தேவன் கொடுத்த விசுவாசம் எல்லாம் இவர்களுக்கு வெற்றியைத் தந்தது என்பதைக் குறித்தும் போதிப்பதற்காக பல்வேறு உதாரணங்களை பயன்படுத்துகிறார். சரியாக ஆபிரகாமைக் கொண்டு ஆரம்பிக்கிறார். ஆபிரகாமைக் கொண்டு ஆரம்பிக்கிற இந்த 8-ஆம் வசனம் ஒரு புதிய பகுதி. இதை ஏன் புதிய பகுதி என்று சொல்லுகிறேன் என்றால், ஆபிரகாமுடைய சரித்திரம் ஆரம்பிக்கும் வரைக்கும் தேவன் பொதுவாக மனுவர்க்கத்தோடு இடைபட்டு வந்தார். ஆதியாகமத்தின் முதல் 11 அதிகாரங்கள் முதல் 2000 வருஷ சரித்திரத்தை நமக்குச் சொல்லுகிறது. அதில் தேவன் குறிப்பிட்ட எந்த மனுஷனைக் கொண்டும் எதுவும் செய்யவில்லை. அவர் பொதுவாக மனுவர்க்கத்தோடு இடைபட்டு வந்தார். அந்த மனுவர்க்கம் பல நேரங்களில் தேவனுடைய வழிகளில் நடக்காமல், நோவாவின் காலத்தில் வெள்ளத்தில் அழிந்தது. மறுபடியும் நோவாவை வைத்து ஆரம்பிக்கிறார். ஆனால் எல்லா மனிதர்களோடும் தான் இடைபடுகிறார். கடைசியில் பாபேல் கோபுரத்தில் வந்து அது முடிவடைகிறது. மக்கள் தேவனுக்கு விரோதமாக எல்லாவற்றையும் தங்களுடைய மகிமைக்காக செய்கிறார்கள். நீ உன் வழியிலேயே போ என்று சொல்லி தேவன் அவர்களை விட்டு விட்டார். இப்போது ஆபிரகாம் என்கிற ஒரு மனுஷனை தெரிந்தெடுக்கிறார். இனி எல்லாமே இந்த ஒரு மனுஷன் மூலமாக, இவனுடைய சந்ததி மூலமாகத்தான். இவனுடைய சந்ததி என்றால் சரீரப்பிரகாரமான சந்ததி மட்டுமல்ல. இவனுடைய சரீரப்பிரகாரமான சந்ததியில் வருகிற இயேசு உலக இரட்சகராக வருவார். அவர் மூலமாக உலகம் முழுக்க இருக்கிற மக்களுக்கு ஆசீர்வாதம் போகும். இப்படி மனித சமுதாயத்தை deal பண்ண வேண்டுமென்றால், நேரடியாக deal பண்ணாமல் ஆபிரகாம் என்கிற ஒரு மனுஷன் மூலமாகத்தான் எல்லாவற்றையும் செய்கிறார். ஆகவேதான் ஆபிரகாமுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவேதான் இது ஒரு புதிய பகுதியின் ஆரம்பம் என்று நம்புகிறேன். ஆபிரகாமுடைய முக்கியத்துவத்தைக் குறித்து எவ்வளவு சொன்னாலும் போதாது. ஆபிரகாமில் தான் சுவிசேஷத்தைக் குறித்த வெளிப்பாடே ஆரம்பிக்கிறது. ஆபிரகாமை வைத்துதான் புதிய ஏற்பாட்டில் புதிய உடன்படிக்கையை போதிக்கிறார்கள். எனவேதான் இது ஒரு புதிய பகுதியின் ஆரம்பம் என்று சொல்லுகிறேன். 

இது புதிய பகுதியின் ஆரம்பம் என்பதற்கு இரண்டாவது காரணம் என்னவென்றால், ரோமர் 4:11-இல், ஆபிரகாம் விசுவாசிக்கிறவர்களுக்கு தகப்பனாய் இருக்கிறான் என்று வாசிக்கிறோம். தகப்பனைப் போலத்தான் பிள்ளைகள் இருப்பார்கள். நாம் அவனுடைய ஆவிக்குரிய சந்ததியில் வந்தவர்கள். விசுவாசமார்க்கத்தார் யாவரும் ஆபிரகாமின் சந்ததி என்று அப்போஸ்தலனாகிய பவுல் போதிக்கிறார். நாம் அவனுடைய சந்ததியாய் இருக்கிறோம். அவனுடைய சந்ததியில் வந்தவர்கள் எல்லாருக்கும் அவனுடைய சாயல் இருக்க வேண்டும். அவனுடைய விசுவாசம், கிரியைகள், செயல்பாடுகள் இவர்களுக்கு இருக்க வேண்டும். அவன் அனுபவித்த காரியங்களை இவர்களும் அனுபவிக்க வேண்டும். அவன் தேவனோடு வைத்திருந்த உறவு அவனுடைய சந்ததியின் மத்தியிலும் காணப்பட வேண்டும். ஏனென்றால் தகப்பனுடைய சாயல் நிச்சயமாக பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். ஒரு தகப்பன் தன் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு வெளியே போகிறான். ஜனங்கள் பிள்ளையைப் பார்த்து, அப்படியே தகப்பனைப்போல இருக்கிறான் என்கிறார்கள். அதாவது, தகப்பனுக்கு இருக்கிற அதே அறிவு பிள்ளைக்கு இருக்கிறது என்று அர்த்தமல்ல. ஏதோ முக்கியமான சில விதங்களில் தகப்பனைப்போல இருக்கிறான் என்று அர்த்தம். ஆகவே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிற நாம் ஆபிரகாமின் சாயலை உடையவர்களாய் இருக்கிறோம். விசுவாச மார்க்கத்தார் யாவரையும் தேவன் ஆபிரகாமின் பிள்ளைகளாக்கி விட்டார். ஒரு சில வசனங்களை காண்பிக்கிறேன். இதனால் தான் ஆபிரகாம் மிகவும் முக்கியம். இந்த வசனத்திலிருந்து நாம் சொல்லப்போகிற காரியங்கள், நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு மிகவும் முக்கியமானவை. கலாத்தியர் 3:29-க்குச் செல்வோம்.

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்(கலாத்தியர் 3:29).

நாம் ஆபிரகாமின் சந்ததி என்பதை அறிந்துகொள்வது ஏன் முக்கியம்? நாம் ஆபிரகாமின் சந்ததியாராய் இருந்தோம் என்றால் கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்ன எல்லா வாக்குத்தத்தங்களும் நம்முடையதாகி விடுகிறது. அவனுக்கு கொடுத்த அத்தனை ஆசீர்வாதங்களும், நன்மைகளும் நமக்குச் சொந்தமானதாகி விடுகிறது. இது மிகப்பெரிய தகவல். நாம் ஆபிரகாமின் சந்ததி என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் முழுக்க முழுக்க இவனுக்கு தேவனுடைய வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவன் இரண்டு காரியங்களுக்காக பிரபலமானவன். ஒன்று, ஆபிரகாமின் விசுவாசம். இரண்டாவது, ஆபிரகாமின் ஆசீர்வாதம். இந்த இரண்டு காரியங்களில் தான் வேதம் இவனைப் பற்றி பெரிதுபடுத்துகிறது. ஆகவேதான் நாம் ஆபிரகாமின் சந்ததி என்பது மிகவும் முக்கியம். ஆபிரகாமின் சந்ததியார் என்பது ஆபிரகாமுடைய ஆசீர்வாதங்களுக்கு நாம் எல்லாரும் சொந்தக்காரர்கள் என்பதை உணர்த்தும்படியாக அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, இது புதிய பகுதி என்று நம்புவதற்கு முதல் காரணம் என்னவென்றால், ஆபிரகாமிலிருந்து ஒரு புதிய சகாப்தம் ஆரம்பிக்கிறது. இரண்டாவது, ஆபிரகாம் எல்லாருக்கும் தகப்பனாகி விட்டான். இது மிகவும் முக்கியம். கலாத்தியர் 3:7-ஐ வாசிப்போம்.

ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக(கலாத்தியர் 3:7).

இங்கு ஏன் இப்படிச் சொல்லுகிறார்? விசுவாச மார்க்கத்தார் மட்டும் தான் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று சொல்லுகிறார். நாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்கள் எல்லாரும் ஆபிரகாமின் பிள்ளைகள் அல்ல என்கிறார். ஏனென்றால் யூதர்கள், நான் ஆபிரகாம்-ஈசாக்கு-யாக்கோபு-யோசேப்பு என்கிற அந்த வரிசையில் வந்திருக்கிறேன் என்பதை நிரூபித்துவிட்டால் நான் ஆபிரகாமின் பிள்ளை என்று எண்ணினார்கள். ஆனால் பவுல் கிடையாது என்கிறார். அது மட்டும் செய்தால் போதாது. ஆபிரகாமைக் குறித்த கதை விசுவாச மார்க்கத்தாரைக் குறித்த கதை. இது வெறும் சரீரப்பிரகாரமான சந்ததி அல்ல. விசுவாச மார்க்கத்தாருக்கான செய்திதான் அதில் அடங்கியிருக்கிறது. எவரெல்லாம் விசுவாச மார்க்கத்தாரோ அவர்கள் மட்டுமே தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள். ஆகவேதான் இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, யோவான் 8-ஆம் அதிகாரத்தில் இயேசுவுக்கும் பரிசேயருக்கும் சண்டை நடக்கிறது. அதுதான் அவரை கடைசியில் சிலுவையில் அறையும்படி கொண்டுபோய் விட்டது. ஆகவே யோவான் 8-ஆம் அதிகாரம் மிகவும் முக்கியம். இயேசு ஒரு காலக்கட்டத்தில், “பிதா என்ன சொல்லுகிறாரோ அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று சொல்கிறார். உடனே அவர்கள், உன்னுடைய பிதா யார் என்று தெரியாது. எங்களுடைய பிதா ஆபிரகாம் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். அதற்கு இயேசு, “உங்கள் பிதா ஆபிரகாமாயிருந்தால் அவனுடைய கிரியைகள் உங்களிடம் இல்லையே, அந்த சாயல் உங்களிடம் இல்லையே, உங்களைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே, உங்களுடைய நடக்கையும், விசுவாசமும் அவனைப்போல இல்லையே” என்கிறார். அதே அதிகாரம் 44-ஆம் வசனத்தில் பிரச்சனை இன்னும் தீவிரமடைந்து விடுகிறது. அவருடைய வார்த்தைகள் அவரை குத்துகிறது. “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்” என்கிறார். உங்களுடைய வாழ்க்கையை பார்த்தால் நீங்கள் எதை மனதார நாடுகிறீர்கள், எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள், எதின் பின்னால் போகிறீர்கள் என்பது எனக்கு தெரிகிறது. நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளே அல்ல. ஆபிரகாமின் பிள்ளை என்றால் நடக்கையிலே அது தெரியுமே என்கிறார். ஆக ஆபிரகாமின் பிள்ளைகளுக்கு ஆபிரகாமின் சாயல் நிச்சயமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், ஆபிரகாம் நம்முடைய பிதாவாய் இருக்கிறார் என்று சொல்லிவிட்டார். 

அடுத்து ஆபிரகாமை நம்முடைய மாதிரியாக ஆக்கிவிட்டதால், இப்போது ஆபிரகாமை படிக்கும்போது ஆபிரகாமுடைய வாழ்க்கையில் நடந்த எல்லாமே கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் நடந்ததை நிழலாட்டமாய் நமக்கு முன்கூட்டியே காட்டும்படியாக கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் அவனை மாதிரியாக வைத்துவிட்டார். இதுதான் ஆபிரகாமின் ஆசீர்வாதம், இதுதான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம், இதுதான் அவனுடைய விசுவாசம் என்று வைத்துவிட்டார். அவனுடைய வாழ்க்கையில் பல காரியங்கள் சித்தரிக்கப்படுகிறது. ஒரு மனுஷன் எப்படி தேவனை அறியாத பின்னணியிலிருந்து வந்து, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, அவரை அறிந்துகொண்டு எப்படி ஒரு புது அடையாளத்தைப் பெறுகிறான் என்று ஆபிரகாமைப் பாருங்கள். அப்படித்தான் நாமும் பெறுகிறோம். தேவன் அவனை புதிய மனுஷனாக்குகிறார், பரிசுத்தவானாக்குகிறார். இதெல்லாம் அப்படியே சித்தரிக்கிறது. ஆபிரகாமுடைய சரித்திரத்தைப் பார்க்கும்போது அதிலே நாமும், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையும் சித்தரிக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ஒரு மனுஷன் இருளிலே வாழ்ந்து, தேவனை அறியாத மார்க்கத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷனுடைய வாழ்க்கையிலே எப்படி ஒளி வீசுகிறது? அவனுக்கு எப்படி தேவனை அறிகிற அறிவு என்கிற ஒளி வீசுகிறது? இதையெல்லாம் இங்கு நாம் கவனிக்கப்போகிறோம். இதையெல்லாம் போதிப்பதற்காகத்தான் ஆபிரகாமின் கதை இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. 

ஆபிரகாமின் கதைக்குப் போவோம். இதில் முக்கியமாக உன்னுடைய தேசத்தையும் இனத்தையும் விட்டு வா என்ற பகுதியைத்தான் பார்க்கப்போகிறோம். ஆனால் ஆபிரகாம் எங்கிருந்து வந்தான் என்பதை யோசித்துப் பாருங்கள். ஆபிரகாமின் சரித்திரத்திற்குப் போவோம். கடந்த வாரம் அதை உங்களுக்குச் சொன்னேன். இன்றைக்கு ஒரு காரியத்தை நினைவுபடுத்துகிறேன். இஸ்ரவேல் ஜனங்களுக்கு மேட்டிமை வந்துவிட்டது. அவர்கள் தங்களை விசேஷித்தவர்களாக எண்ணுகிறார்கள். ஏனென்றால் கர்த்தர் எங்களுக்குத்தானே பத்து கற்பனையையும், எல்லா வாக்குத்தத்தத்தையும், ஆசீர்வாதத்தையும் கொடுத்தார். அப்படியென்றால் நாங்கள் மிகவும் விசேஷமானவர்கள், யோக்கியர்கள், ஆசீர்வதிக்கப்பட்ட ஜனம் என்று எண்ணுகிறார்கள். கர்த்தர் அவர்களுக்கு சொல்லுவதைக் கவனியுங்கள்.   

ஏசாயா 51-ஆம் அதிகாரம் முதல் இரண்டு வசனங்களைப் பார்ப்போம்.

நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள். உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்(ஏசாயா 51:1, 2). 

இங்கு தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்லுவதைக் கவனியுங்கள். இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் பெரிய யோக்கியர்களாக ஆண்டவரை தேடிக் கொண்டிருந்தபோது, இந்த ஜனங்கள் நம்மைத் தேடுகிறார்களே, இவர்கள் மிகவும் நல்ல ஜனங்கள், மற்றவர்கள் பிரயோஜனமில்லாதவர்கள், இவர்கள் தான் மிகவும் பிரமாதமானவர்கள் என்று அப்படி உங்களுக்கு நான் என்னை வெளிப்படுத்தி, உங்களை என்னோடு சேர்த்துக்கொள்ளவில்லை. எல்லா ஜனங்களைப்போல நீங்களும் இருளில் தான் இருந்தீர்கள். நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையை நோக்கிப் பாருங்கள். கன்மலை என்றால் பாறை. கன்மலையை வெட்டி எடுப்பது என்பது அந்தக்காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு காரியம். அதற்கான ஆயுதங்கள் கூட இருந்திருக்காது. வெட்டி எடுப்பது என்பது மிகவும் கடினமான வேலை. ஒரு மனுஷனால் முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால் தேவன், நான் உன்னை அதிலிருந்து வெட்டி எடுத்தேன் என்கிறார். அந்த கன்மலை அவர்களுடைய வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், அவர்கள் எதை பின்பற்றினார்கள், எப்படி வாழ்ந்தார்கள், அவர்களுடைய பாவம், அக்கிரமம் மற்றும் அநியாயத்தைக் குறிக்கிறது. அவர்கள் அப்படி வாழ்ந்து, வாழ்ந்து வாழ்க்கை கற்பாறை போல ஆகிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையில் ஆபிரகாம் வாழ்ந்து வந்தான். தேவன் அவனை அதிலிருந்து வெட்டி எடுத்திருக்கிறார். அவனுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. யோசுவா 24:2-இல் தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம், உங்களுடைய முற்பிதாக்கள் நதிக்கு அப்புறத்தில் வாழ்ந்தார்கள், வேறே தேவர்களை வணங்கினார்கள். அதிலிருந்து உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை நான் எடுத்தேன். அவனை அழைத்து, தனியாகக் கொண்டுவந்து, ஈசாக்கைக் கொடுத்து, அவனை திரட்சியாக்கி ஆசீர்வதித்தேன் என்கிறார். 

ஆபிரகாம் எங்கிருந்து வந்தான் என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். கற்பாறை போன்ற ஒரு சூழ்நிலை, வித்தியாசமான மத நம்பிக்கை, அணுகுமுறை, சிந்தனை, தத்துவம் இதைப் பின்பற்றி வித்தியாசமான விதத்திலே வாழ்ந்து வந்த மக்கள் இவர்கள். இவர்கள் கர்த்தரைப் பற்றி எந்த அறிவும் இல்லாமல் இருந்தார்கள். ஆபிரகாம் தேவனை அறியாத ஜனத்தின் மத்தியில் வாழ்ந்து, கர்த்தரைக் குறித்த எந்த அறிவும் வெளிச்சமும் இல்லாத ஒரு சமுதாயத்திலிருந்து வந்தவன். கர்த்தர் அவனை அழைக்கும்போது அவனுக்கு 70 வயது. ஆங்கிலத்தில், “you can’t teach an old dog new tricks” என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது, பழைய நாய்க்கு புதிய வித்தைகளை கற்றுத்தர முடியாது என்பது அதன் அர்த்தம். இது எவ்வளவு உண்மை! 70 வயது நபருக்கு புதிதாக ஏதாவது கற்றுத்தர பார்த்திருக்கிறீர்களா? ஏனென்றால் அவருக்கு 70 வயது ஆகிவிட்டது. அதாவது அவர் கற்பாறை போன்று set ஆகி விடுகிறார். அதே மாதிரி சாப்பிட்டு, பேசி, எண்ணி, காரியங்களைச் செய்து, ஒரே விதமாக காரியங்களை நம்பி, விசுவாசித்து, நடந்து, பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு அதில் set ஆகிவிட்டார். அப்படிப்பட்ட நபரை மாற்றுவது மிகவும் கடினம். கர்த்தர் ஆபிரகாமை சந்திக்கும்போது அவனுக்கு 70 வயது. அவன் இருளில், தேவனை அறியாத சமுதாயத்தில் வாழ்ந்து வருகிறான். திடீரென்று அவனுக்கு தேவனோடு ஒரு சந்திப்பு நடக்கிறது. அதைக் குறித்து ஸ்தேவான் பிரசங்கிக்கும்போது சொல்லுகிறான். ஸ்தேவான் எருசலேம் சபையில் முதல் இரத்தசாட்சியாக மரித்தவன். அவன் பிரசங்கிக்கிறான். அப்போது இவன் தேவதூஷணமான வார்த்தைகளை ஓயாமல் பேசுகிறான் என்று அவனை யூத அதிகாரிகளுக்கு முன்பாக பிடித்துக் கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். அவர்கள், நீ சொன்னது உண்மையா, நீ இப்படிச் செய்தாயா? என்று கேட்கிறார்கள். அதற்கு அவன் சொல்லும் பதிலைக் கவனியுங்கள்.

அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்(அப்போஸ்தலர் 7:1, 2). 

ஸ்தேவான் ஆபிரகாமின் கதையிலிருந்து ஆரம்பிக்கிறான். மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமானார் என்கிறான். அதனுடைய அர்த்தம் என்ன? தேவன் ஆபிரகாமுக்கு எப்படி தரிசனமானார் என்று நமக்கு ஒரு தகவலும் இல்லை. அது எப்படி நடந்தது என்பது முக்கியமல்ல. அங்கு என்ன நடந்திருக்கும் என்று இரண்டு காரியங்களை உறுதியாகச் சொல்லலாம். ஒன்று, அன்றைக்கு வரைக்கும் ஜீவனுள்ள மெய்யான தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதே தெரியாமல், தேவனைக் குறித்த அறிவே இல்லாமல் இருளிலே வாழ்ந்தான். அன்றைக்கு ஏதோ ஒரு விதத்தில் அந்த சம்பவத்தின் மூலமாக அவனுடைய கண் திறக்கப்பட்டு, உணர்வு உண்டாகி, வெளிச்சம் வீசி, திடீரென்று ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார், அவர்தான் என்னோடு இடைபட்டுக் கொண்டிருக்கிறார் என்கிற அறிவு அவனுக்கு உண்டாயிற்று. இரண்டாவது, இந்த தேவன் ‘மகிமையின் தேவன்’ என்ற வார்த்தையை நாம் கவனிக்க வேண்டும். மகிமை என்றால், ஒருவர் நன்றாக விளையாடுகிறார். அக்காலத்தில் அவர் மகிமையான வீரர் என்று சொல்லுவோம். கிரிக்கெட்டில் இன்றைக்குத்தான் அவருடைய முழு மகிமை வெளிப்பட்டது என்று சொல்லுகிறோம். ஒரு பூ பூத்து, அது blossom ஆகி வரும்போது, அது தன் பூரண மகிமையோடு காட்சியளித்தது என்று சொல்லுகிறோம். மகிமை என்றால் என்ன? அவர் எப்படிப்பட்டவர் என்கிற அறிவு. அவர் மகிமையின் தேவன் என்றால், அவர் நல்லவர், பெரியவர், அற்புதமானவர், அதிசயமானவர் என்று அர்த்தம். இந்த தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. இவர்தான் சிருஷ்டி கர்த்தா. இவர் தான் எல்லாவற்றுக்கும் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறார் என்கிற அறிவு அவனுக்கு உண்டாகிறது. ஒன்று, நான் எதை எதையோ வணங்கி வந்தேன், ஆனால் இன்றைக்குத்தான் உணருகிறேன். எனக்கு ஒரு வெளிச்சம் உள்ளத்தில் வந்துவிட்டது. ஜீவனுள்ள மெய்யான தேவன் ஒருவர் இருக்கிறார். இப்போது என்னோடு இடைபட்டு, சந்தித்துக் கொண்டிருக்கிற தேவன் இவர்தான் என்று அந்த சம்பவத்தின் மூலமாக அவன் உணர்ந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அவர் சர்வ வல்லமையுள்ள தேவன், அன்பின் தேவன், இரக்கத்தின் தேவன், தயவின் தேவன், போதுமான தேவன், அவரால் எல்லா தேவைகளையும் சந்திக்க முடியும், அவர் அற்புதமானவர் என்கிற அறிவு அவனுக்கு உண்டாகிறது. இதுதான் அதனுடைய அர்த்தம். ஏன் இதைச் சொல்லுகிறார்? ஏன் வேதம் இதை நமக்கு தெரிவிக்கிறது? உனக்கும் அப்படி உண்டாயிருக்கிறதா, நீயும் இப்படிப்பட்ட பின்னணியிலிருந்துதான் வந்தாயா என்பதுதான் அங்கு கேள்வி. கன்மலையிலிருந்து வெட்டி எடுத்தது போல கர்த்தர் உங்களை வெட்டி எடுத்திருக்கிறாரா? நாம் வெட்டியெடுக்கப்பட்ட கன்மலையை நோக்கிப் பார்க்க வேண்டும், துரவின் குழியை நோக்கிப் பார்க்க வேண்டும். தேவனை அறியாத நிலை, கர்த்தரைக் குறித்த அறிவு இல்லை என்கிற நிலை, உணர்வு இல்லை என்கிற நிலை, ஒரு இருள், ஜீவனுள்ள மெய்யான தேவன் யார் என்று தெரியாமல் எப்படி எப்படியோ இருந்தோம். அப்படிப்பட்ட நம்மை தேவன் தேடி வந்து இரட்சித்திருக்கிறார். இரட்சிப்பிலே இது மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. இதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுவதைக் கவனியுங்கள்.

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்(1 கொரிந்தியர் 4:6).

ஒளி என்பது அறிவு. ஒரு மனுஷனுக்கு விளங்காத ஒன்று விளங்கிவிட்டது என்று அர்த்தம். தேவன் ஆதியிலே வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, இருளின் மத்தியிலே நின்றுகொண்டு, வெளிச்சம் உண்டாகக்கடவது என்று சொன்னார், வெளிச்சம் உண்டாயிற்று. இயேசு கிறிஸ்து தேவனை வெளிப்படுத்த வந்தவர். இயேசு கிறிஸ்துவின் முகத்தை தரிசித்தால் தேவனையே அறிந்துகொள்ளலாம். தேவன் தம்மைக் குறித்த அறிவை இயேசுவிலே வைத்துவிட்டார். தேவனைக் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இயேசுவின் முகத்தில் இருக்கிறது. அந்த அறிவு நமக்கு உண்டாகும்படியாக எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். என்ன அற்புதமாய் சொல்லப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்! அதுதான் இரட்சிப்பு. அன்றைக்கு மகிமையின் தேவன் அவனுக்கு தரிசனமானார் என்று ஸ்தேவான் சொல்லுவதின் அர்த்தம் என்ன? இருளிலே ஒளியை பிரகாசிக்கச் சொன்ன தேவன் அன்றைக்கு ஆபிரகாமுடைய இருதயத்திலே தேவனைக் குறித்த அறிவை பிரகாசித்திருக்கிறார். தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் போதுமானவர், நல்லவர், அவருடைய குணங்கள் இப்படி, தன்மை இப்படி என்று அவரைக் குறித்து அறிந்துகொள்ளும்படியாக அன்றைக்கு அவனுக்கு உதவி செய்தார். மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி என்பதின் அர்த்தம் அதுதான். தேவன் ஒரு மனுஷனுக்கு இந்த ஒளியை வீசச் செய்யவில்லை என்றால் அவன் எப்படியிருப்பான் என்பதைப் பார்ப்போம்.

ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்(1 கொரிந்தியர் 2:14).

ஜென்ம சுபாவமான மனுஷன் என்றால் அவன் பிறந்திருக்கிறான், ஆனால் மறுபடியும் பிறக்கவில்லை. அவனுக்குள் ஒளி உண்டாகவில்லை. அவன் பிறந்த நிலையிலே அப்படியே இருக்கிறான். ஆகவே ஜனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் கோபப்படாதீர்கள். கர்த்தர் அவனுக்குள் அவருடைய ஒளியை பிரகாசிக்கப் பண்ணவில்லை என்றால் அவனுக்கு அது விளங்காது. ஆகவேதான் கர்த்தர் அவனுக்கு ஒளியை பிரகாசிக்கப்பண்ண வேண்டுமென்று ஜெபிக்க வேண்டும். நாம் அவனுக்கு புத்திசாலித்தனமாய் சொல்லுவதால் விளங்கிவிடாது. அவைகள் அவனுக்கு பைத்தியமாக இருக்கும். இதெல்லாம் சொந்த அறிவை வைத்தோ, உலக படிப்பை வைத்து அறிந்துகொள்கிற அறிவை வைத்தோ அறிந்துகொள்வதல்ல. இவைகள் ஆவிக்குரியபடி நிதானிக்கப்பட வேண்டும். எபேசியர் 4:18-ஐ கவனியுங்கள். இரட்சிக்கப்படாத ஒரு மனுஷன் எந்த நிலையில் இருக்கிறான் என்பதைச் சொல்லுகிற வசனம் இது. 

அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்(எபேசியர் 4:18, 19).  

தேவனை அறியாதவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, இருதயம் கடினமாகி விட்டது, அங்கு அறியாமை ஆட்கொள்கிறது. அவர்கள் தேவனுக்கு அந்நியராய் இருக்கிறார்கள். இவர்களுக்கும் தேவனுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தேவனைப் பற்றி எந்த உணர்வும் இல்லை. எல்லாவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? அதுதான் இருளில் அகப்பட்ட மனுஷனுடைய நிலை. அவனுக்கு தேவனைக் குறித்த அறிவோ, பயமோ இல்லை. தேவனை உண்மையாய் அறிந்திருக்கிற மனுஷன் அசுத்தங்களில் ஈடுபடமாட்டான். ஆண்டவர் இருக்கிறார், நான் அவரிடம் கணக்கு சொல்ல வேண்டுமே, அவருக்கு முன்பாக நிற்க வேண்டுமே, அவர் பார்க்கிறார் என்று பயப்படுகிறான். ஆனால் தேவனை அறியாதவனுக்கு எந்தவிதமான உணர்வோ, அறிவோ இல்லை. இவன் அறியாமையில் இருக்கிறான், தேவனுக்கு தூரமாக இருக்கிறான். இவனுடைய இருதயம் கடினமாகி விட்டது, புத்தி அந்தகாரமாகி விட்டது. இதெல்லாம் இவர்களுக்கு புரியவே இல்லை. ஆபிரகாமுக்கு என்ன நடந்தது என்பது இதிலிருந்து விளங்குகிறது. அவனுக்கு புத்தியிலிருந்து அந்தகாரம் நீங்கினது, இருதய கடினம் நீங்கினது, அறியாமை நீங்கினது, தேவனுக்கு தூரமாயிருந்தவன் தேவனுக்கு சமீபமாக காண்கிறான். யோபு, “என் காதுகளால் உம்மைக் குறித்து கேள்விப்பட்டேன், இப்பொழுது என் கண்களால் உம்மை காண்கிறேன்” என்கிறான். அவன் கர்த்தரிடம் நெருங்கி வந்துவிட்டான், இதுவரை அறிந்திராத தேவனை கண்ணால் கண்டது போல காண்கிறான். அவர் உண்டென்று உணருகிறான். உணர்வில்லாமல் இருந்தவன் உணர்வுள்ளவனாக மாறிவிட்டான். அசுத்தங்களை நடப்பித்து, அப்படிப்பட்ட பாவ சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஆபிரகாம் திடீரென்று வித்தியாசமான மனிதனாக வாழ ஆரம்பிக்கிறான். மகிமையின் தேவன் அவனுக்கு தரிசனமாகி என்பதின் அர்த்தம் அதுதான். அந்த சந்திப்பில் இதெல்லாம் நடந்திருக்கிறது. இது நமக்கு நடந்திருக்கிறது, அதுதான் மெய்யான இரட்சிப்பு. 

தேவன் அவனுக்கு தரிசனமாகி அந்த தேசத்திற்கு இவன் போய் சேருவதற்கு இரண்டு நிபந்தனைகளைச் சொல்லுகிறார். அது சாதாரண நிபந்தனை அல்ல. ஒன்று, உன்னுடைய தேசத்தை விட்டுப் போ. இன்னொன்று, உன்னுடைய இனத்தை விட்டுப் போ என்பது. தேவன் ஏன் இவ்வளவு பெரிய நிபந்தனையை கொடுக்க வேண்டும்? 70 வயதுள்ள மனுஷனுக்கு ஊரை விட்டுப் போவது என்பது லேசான நிபந்தனையா? 70 வயதில் குடும்பம் மிகவும் தேவைப்படுகிறது. அப்போது குடும்பத்தை விட்டுப் போகமாட்டோம். எவ்வளவுக்கு எவ்வளவு குடும்பத்திற்கு அருகே இருக்கலாம் என்று பார்த்து அப்படி இருப்போம். ஆனால் கர்த்தர் அதற்கு எதிராக, உன் தேசத்தையும் இனத்தையும் விட்டுப் போ என்று சொல்லுகிறார். ஏன் அவர் இப்படிப்பட்ட நிபந்தனையை வைக்கிறார்? இதை நாம் எப்படி விளங்கிக்கொள்வது? இதில் ஒரு ஆழமான அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால், இன்றைக்கு நாம் இயேசுவைப் பின்பற்றும்படி ஜனங்களை அழைக்கும்போது, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது தேசத்தையும், குடும்பத்தையும் விட்டு வா என்று பிரசங்கிக்கிறோமா? கிடையாது. நாம் தேசத்தை நேசிக்கிறோம். அதை விட்டு போவதில்லை. இங்குதான் இருக்கிறோம். இங்குதான் வாழுகிறோம், பிரசங்கிக்கிறோம்; இதற்காக ஜெபிக்கிறோம், இதனுடைய நலனை விரும்புகிறோம். நாம் தேச விரும்பிகள். நாம் குடும்பத்தை நேசிக்கிறோமா? ஆம். தன்னுடைய சொந்த குடும்பத்தை கவனிக்காதவன் அவிசுவாசியிலும் கெட்டவன், விசுவாசத்தை மறுதலித்தவன் என்று வேதம் சொல்லுகிறது. இன்னும் சொல்லப்போனால், அவன் கிறிஸ்தவனே அல்ல என்று சொல்லுகிறது. தேவன் குடும்பத்தை உண்டாக்கினார், அதை விட்டு விட்டு வா என்று அவர் சொல்லவில்லை. இதையெல்லாம் விடுவதுதான் இரட்சிப்பு என்று பிரசங்கிப்பதும் தவறு. தேசத்தை விட்டு விடு, குடும்பத்தை விட்டு விடு என்று பிரசங்கிக்கக்கூடாது. அப்படியென்றால் எப்படித்தான் பிரசங்கிப்பது? இதனுடைய அர்த்தம் என்ன? தேவன் இதை ஆபிரகாமுக்குச் சொன்னாரே, ஆபிரகாமுக்கு சொன்னது எல்லாம் அப்படியே விசுவாச வாழ்க்கையில் நடப்பதை பிரதிபலிக்கிறது, இதை நிழலாட்டமாக காட்டுவதற்காகத்தான் ஆபிரகாமுக்கு நடந்தது எல்லாம் நடந்தது என்று நான் சொன்னேன் அல்லவா, அப்படியென்றால் அதன் அர்த்தம் என்ன? அதை நான் எப்படி புரிந்துகொண்டு, பயன்படுத்துவது? 

கர்த்தர் ஒரு மனுஷனுக்கு தரிசனமாகி, அவனுக்கு உணர்த்திவிட்டால், அவனுக்கு தேவனை அறிகிற அறிவைக் கொடுத்துவிட்டால் அடுத்த படி என்னவென்றால், அவன் பழையவைகளை எல்லாம் விட்டு ஒழித்துவிட்டு, ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசிக்க வேண்டும். உன்னுடைய ஊரையும், வீட்டையும் விட்டுவிட்டு வா என்று நாம் பிரசங்கிப்பதில்லை. பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு வா என்று நாம் பிரசங்கிக்கிறோமோ அதைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. இப்படித்தான் இதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தேவன் ஒரு மனுஷனுக்கு தரிசனமாகி, அவனோடு இடைபட்டு, இரட்சித்து, அவனை தன் பக்கமாக இழுக்கிறார். அவன் தேவனை பின்பற்றுகிறவனாக மாறிவிட்டான் என்றால் உடனடியாக அவன் செய்ய வேண்டிய காரியம், பழையதை விட்டுவிட்டு இந்த புதிய வாழ்க்கைக்குள் பிரவேசிப்பது. எந்த அளவிற்கு பழையது ஒழிந்துபோகிறது? குடும்பத்தையும், தேசத்தையும் விட்டுப் போனால் எப்படியிருக்குமோ அந்த அளவிற்கு எல்லாமே புதிதாகிறது. “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” என்று சொல்லப்பட்டிருக்கிற அப்படிப்பட்ட முற்றிலுமான மாற்றம் (radical change) உண்டாகிறது. முன்பு பாவியாய் இருந்த மனுஷன் இப்போது புது வழிகளை பின்பற்றுகிறான். அவனுக்கு ஒரு புதிய நோக்கம், புதிய தரிசனம், புதிய விருப்பம் உண்டாகி விட்டது. அவன் புதிய காரியங்களுக்காக வாழுகிறான், புது விருப்பங்கள் அவனுடைய உள்ளத்தில் இருக்கிறது. அவன் எண்ணுகிற விதம், அணுகுமுறை எல்லாமே புதிதாக இருக்கிறது. இதற்கு முன்பு இல்லாத விதத்திலே அவன் வாழுகிறான். இதுதான் உன்னுடைய குடும்பத்தையும், தேசத்தையும் விட்டு வா என்று தேவன் கொடுத்த அழைப்பு. 

இதை இரண்டு விதத்தில் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று, பழையதை விட்டு புதியதிற்குள் வருவது என்பதை வேதவசனம், சிலுவையில் இயேசு மரித்ததின் மூலமாக இனி நாம் பாவத்தை சேவிக்க வேண்டிய அவசியமில்லை என்று வேதம் போதிக்கிறது.

நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்(ரோமர் 6:6).  

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதாகி விட்டது. பழைய மனுஷன் மரித்துவிட்டான். ஆகவே இனி நாம் பாவத்திற்கு ஊழியஞ்செய்ய வேண்டிய அவசியமில்லை என்கிறார். இது legal aspect. அதாவது, நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக ஒரு நீதிபதி ஒன்றை எழுதி கையெழுத்திட்டு தீர்ப்பாக ஆவது. முன்பு உங்கள் சொத்து யாருக்கு என்பது சர்ச்சையில் இருந்தது, இப்பொழுது அது உங்களுக்கு சொந்தம் என்று தீர்ப்பாகி விட்டது. ஆனால் வேறொருவன் அங்கு தங்கியிருக்கிறான். தீர்ப்பு வந்துவிட்டதால் உடனே நீங்கள் அங்கு சென்றுவிட முடியாது. அங்கு ஏற்கனவே தங்கியிருக்கிறவனை அங்கிருந்து move பண்ண action எடுக்க வேண்டும், அதற்கு சில உதவிகள் தருகிறார்கள். அவனை அங்கிருந்து move பண்ணலாம். நீங்கள் நடைமுறையில் அங்குபோய் வாழ்ந்து, அதை சொந்தம் கொண்டாடுவதற்கு சில நாட்கள் அவசியம். ஆக legal என்பது வேறு, practical என்பது வேறு. அது உங்களுடையது என்றாகி விட்டது, ஆனால் அதை நீங்கள் இன்னும் அனுபவிக்க ஆரம்பிக்கவில்லை. நம்முடைய பாவங்கள் எல்லாம் இயேசுவோடு சிலுவையில் செத்துவிட்டது. நாம் இனி பாவங்களுக்கு சேவை செய்ய வேண்டியதில்லை என்கிற நிலைமை உண்டாகி விட்டது. ஆனால் அது நடைமுறையில் உண்டாகி இருக்கிறதா என்பது வேறு. அது அமலுக்கு வந்துவிட்டதா? பாவத்திற்கு நீங்கள் சேவை செய்ய வேண்டியதில்லை என்று சொல்லுகிறதே, அப்படியென்றால் நாம் பாவம் செய்வதில்லையா, பாவஞ்செய்யாமல் வாழுகிறோமா? நாம் அப்படி இருக்க வேண்டும். அதை வேதவசனம் திட்டவட்டமாக போதிக்கிறது. யாக்கோபு 4-ஆம் அதிகாரத்திற்குச் செல்வோம்.

விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்(யாக்கோபு 4:4).

அவர் விசுவாசிகளுக்கு இதை எழுதுகிறார். அன்றைக்கு சிலர் இப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் உலகத்தோடு ஒத்துப்போய்விட்டார்கள். யாக்கோபு இவர்களை கண்டிக்கிறார். நீ உலகத்தோடு ஒத்துப்போய் பழைய வாழ்க்கையை வாழ்ந்தால் தேவனுக்கு பகைஞனாகி விட்டாய், நீ தேவனுக்கு விரோதி என்கிறார். தேவன் அவர்களை பாவத்தின் பிடியிலிருந்து விடுதலையாக்கி விட்டார். இனி அவர்கள் பாவத்திற்கு அடிமையாகி அதை சேவிக்க வேண்டியதில்லை. அவர்கள் பாவத்தின் மீது அதிகாரம் உள்ளவர்கள். ஆனால் நடைமுறையில் அதை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. அந்த ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க தீர்மானித்து அதற்கு action எடுக்கவில்லை. பாவத்தை ஜெயித்து வாழுவது என்னுடைய பிறப்புரிமை என்று அந்த உரிமையை சொந்தம்பாராட்ட தவறிவிட்டார்கள். அவர்கள் இன்னும் பழைய நிலையிலேயே பழைய ஆளைப்போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்(2 கொரிந்தியர் 6:14, 15).

தேவன் ஆதியாகமம் 12-இல், உன்னுடைய தேசத்தையும், இனத்தையும் விட்டுப் போ என்று சொல்லுகிறார். அதைப் போலவே இங்கும் சொல்லப்பட்டுள்ளது. வார்த்தைகள் எவ்வாறு ஒன்றுபோல இருக்கிறது என்று பாருங்கள். இரட்சிப்புக்கென்று அழைக்கப்பட்டவர்களுக்கு பவுல் அதையே சொல்லுகிறார். தேவன் நம்மை அழைத்தார் என்றால், உன் தேசத்தையும் இனத்தையும் விட்டுப் போ என்று சொன்னார் என்றால், உடனே நாம் புறப்பட வேண்டும். இவர் எப்பேர்ப்பட்ட மகிமையின் தேவன்! உன்னை நடத்தக்கூடியவர், உனக்காக ஒரு பெரிய கானான் தேசத்தை, அருமையான நலமும் விசாலமுமான பாலும் தேனும் ஓடுகிற வாழ்க்கையை, சந்தோஷமான, ஆசீர்வாதமான குடும்ப வாழ்க்கையை வைத்துக்கொண்டு அழைக்கிறாரே, நாம் அதற்கு உடனே புறப்பட்டு போக வேண்டும். இனி நான் இப்படி இருக்கமாட்டேன் என்று உள்ளத்தில் தீர்மானம் பண்ண வேண்டும். நான் கர்த்தருக்கென்று அழைக்கப்பட்டிருக்கிறேன், நான் இவ்வளவு நாள் இப்படி வாழ்ந்ததும் செய்ததும் தவறு. இந்த தவறுக்காக நான் வருந்துகிறேன். இந்த ஜீவனுள்ள தேவன் என்னை நேசித்து, எனக்காக அப்பேர்ப்பட்ட அருமையான கானான் தேசம் போன்ற வாழ்க்கையை வைத்து அழைக்கிறார். அதை நான் இழந்துபோகக்கூடாது என்று உடனே புறப்பட வேண்டும். ஆபிரகாம் புறப்பட்டுப் போகாதிருந்தால் அவனுக்கு சந்ததி உண்டாயிருக்குமா என்பதே கேள்விக்குறி. அவன் பிள்ளையில்லாதவனாய் இருந்தான். அவனுக்கு சந்ததியே உண்டாயிருக்காது, அவன் அழிந்து போயிருப்பான். ஆனால் அவன் புறப்பட்டு போகிறான், பிள்ளை பிறக்கிறது, வாசல் திறக்கிறது, வெற்றி உண்டாகிறது, கர்த்தர் அவனை பெருகப்பண்ணுகிறார். அவனை தனியாக அழைத்துக்கொண்டு வந்து அவனுக்கு ஈசாக்கை கொடுத்து, அவனை திரட்சியாக்குகிறார். கர்த்தர் அதை நமக்குச் செய்வாரா? விசுவாச வாழ்க்கை என்பது முதலில் இரட்சிப்பில் அவரை சந்தித்து, அதன் நிமித்தமாக இந்த உலகத்தில் வேறு எந்த வேண்டாத காரியங்களோடும் எனக்கு ஈடுபாடு கிடையாது என்று சொல்லி வெறுத்து, தள்ளி தேவனை முழு மனதோடு பின்பற்றப்போகிறேன், அவருடைய வாக்குத்தத்தங்களை சொந்தமாக்கிக் கொள்ளப்போகிறேன், அவருக்காக வாழப்போகிறேன், அவருடைய ஆசீர்வாதங்களை பெறப்போகிறேன், நான் அவரையே நம்புகிறேன், என்ன நடந்தாலும் நான் அவருக்காக வாழ்வேன் என்று சொல்லி வேண்டாத காரியங்களையெல்லாம் விட்டுவிட்டு, ஒரு புது வாழ்க்கையை தேவனுடைய வழியின்படி ஆரம்பிப்பதுதான் சரியான விசுவாச வாழ்க்கை. 

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்(ரோமர் 12:1, 2).

கர்த்தருக்காக வாழும்படியாக, அவர் சொல்லுவதைச் செய்யும்படியாக, அவருக்காகவே காரியங்களை நடப்பிக்கும்படியாகத்தான் சரீரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம் சரீரத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்படியென்றால், இந்த சரீரத்தை வைத்து அவருக்காக வாழ வேண்டும். அவர் சொல்லுகிற இடத்திற்கு போக வேண்டும், அவர் சொல்லுவதைச் செய்ய வேண்டும். ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பது எப்படி? நம் மனம் புதிதாக வேண்டும், எண்ணங்கள் புதிதாக வேண்டும், அணுகுமுறை வித்தியாசமாக மாற வேண்டும், யோசனைகளும், எண்ணங்களும், திட்டங்களும், விருப்பங்களும் மாற வேண்டும். பவுல், “மனம் புதிதாகிறதினாலே புதிதாகுங்கள்” என்று சொல்லுகிறார். நாம் எதற்கு சபைக்கு வருகிறோம்? மனம் புதிதாவதற்குத்தான். 

துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்(ரோமர் 13:14).

நம் சரீரத்தை எதற்காக பயன்படுத்த வேண்டுமென்று இங்கு சொல்லப்பட்டுள்ளது. 

ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்(கொலோசெயர் 3:5).

இது பாவம் செய்கிற அவயவங்களை அழித்துப்போடுவதைப் பற்றி சொல்லவில்லை. அப்படி அழித்துப்போட்டால் பிறகு அழித்துப்போடுவதற்கு ஒன்றுமில்லாமல் போய்விடும். அந்த அவயவங்களை அழித்துவிட்டால் நாம் பாவம் செய்யமாட்டோம் என்று சொல்ல முடியாது. கை, கால் இல்லாமலேயே நாம் பாவத்திற்கு இடம் கொடுக்கிற வரைக்கும் பாவம் செய்யலாம். நம்முடைய எண்ணங்களையும், சிந்தனைகளையும், அணுகுமுறைகளையும், நோக்கங்களையும், திட்டங்களையும், விருப்பங்களையும் மாற்ற வேண்டும். அப்போதுதான் நாம் என்ன செய்கிறோம் என்பதும் மாறும். ஏனென்றால் நாம் எதை விரும்புகிறோமோ அதைத்தான் நம் அவயவங்கள் செய்யும். 

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்(1 கொரிந்தியர் 6:19, 20). 

நம்முடைய சரீரம் தேவனுடைய ஆலயம், அவர் அதை விலை கொடுத்து வாங்கிவிட்டார். அது நமக்கு சொந்தமல்ல. நமக்கு சொந்தமில்லாததை நம்முடையது போன்று நாம் பயன்படுத்த முடியாது, நாம் அதை எங்கு வேண்டுமானாலும் கொண்டுபோக முடியாது, என்ன வேண்டுமானாலும் செய்ய முடியாது. அதற்கான சொந்தக்காரரிடம் கேட்க வேண்டும்.

ஆபிரகாமின் சரித்திரத்தில் இரட்சிப்பைக் குறித்து பெரிய வெளிப்பாடு இருக்கிறது. தேவன் எப்படி ஒரு மனுஷனை இருளில் சந்திக்கிறார், தம்மை வெளிப்படுத்துகிறார், அவனை தன் பக்கம் இழுத்து, பிள்ளையாக்கி, புதிய வாழ்க்கையை தந்து, புதிய திசையில் கொண்டுபோய், புதிய மனுஷனாக மாற்றுகிறார் என்கிற காரியங்களெல்லாம் இங்கே இருக்கிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால், இதெல்லாம் தேவனுடைய கிருபை ஒரு மனுஷனுக்குள் நடப்பிக்கிற காரியங்கள். தேவன் ஒரு மனுஷனுக்கு தம்மை வெளிப்படுத்தும்போது, ஏதோ வெறுமையாக அவனோடு ஈடுபட்டு, அவனுடைய உள்ளத்தை ஈர்ப்பதில்லை. அவனை ஈர்த்துவிட்டு, நீ எப்படியோ வாழ்ந்துகொள் என்று பெலனற்றவனாக அவனை விட்டு விடுவதில்லை. கர்த்தர் உங்களை அழைத்து, தம்மண்டை இழுத்திருக்கிறார். நீங்கள் அவரிடம் திரும்பியிருக்கிறீர்கள். கர்த்தரைக் குறித்த எந்த அறிவும் இல்லாமல் வாழ்ந்த நீங்கள் இன்றைக்கு கர்த்தரை அறிந்துகொண்டீர்கள் என்றால், உங்களை ஒரு பெரிய நோக்கத்திற்காக அவர் அழைத்திருக்கிறார். இயற்கைக்கு மேலான காரியங்களை உங்களால் நடப்பிக்க முடியும். நம்ப முடியாத அளவிற்கு பெரிய காரியங்களை உங்களால் செய்ய முடியும். விசுவாசம் அதற்கு பயன்படுகிறது. அதே நேரத்தில் உங்களுடைய இயற்கை சுபாவத்திற்கு எதிராகக்கூட நீங்கள் செய்ய முடியும். தேசத்தையும், ஜனத்தையும் விட்டுப் போனால் இயற்கை சுபாவம் போய் விடாது. அது பாவத்தைத்தான் நாடுகிறது. ஆனால் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற அழைப்பு, அவர் நம்மை தொட்டிருக்கிற விதம், அவர் நமக்கு காண்பிக்கிற கிருபையானது பாவத்தின் ஈர்ப்பைக் காட்டிலும் பெரிய பெலத்தை நமக்குள் உண்டாக்குகிறது. அந்த ஈர்ப்புக்கு இணங்காமல் கர்த்தருக்காக வாழும்படியாக பெலத்தையும், ஆற்றலையும் நமக்கு தருகிறது. உலகத்திலிருந்து பிரிந்து வாழுவது என்பது மனுஷனுக்கு இயல்பாக வருகிற ஒன்றல்ல. அவன் உலகத்தோடு சேர்ந்து, அதோடு ஒத்துப்போய் வாழுவதற்குத்தான் விரும்புகிறான். மாம்சத்தை எழும்பாதபடிக்கு தடைசெய்வது என்பது மனுஷனுக்கு இயல்பாக வருவதில்லை. மாம்ச இச்சையின்படி தான் அவன் நடக்கிறான். தான் எதை விரும்புகிறானோ அதைச் செய்கிறான். ஆனால் கர்த்தர் ஒரு மனுஷனுக்கு கிருபை காட்டுவார் என்றால், மாம்சம் விரும்புகிறதைச் செய்யாமல், தேவன் விரும்புகிறதைச் செய்கிற பெலனை அவனுக்குத் தருகிறார். அவன் தன்னுடைய இச்சைகளின்படி நடக்காமல், தேவனுடைய சித்தத்தின்படி நடக்க ஆரம்பிக்கிறான். அதுதான் இரட்சிப்பு. அதுதான் ஆபிரகாமுக்கு நடந்தது. அவன் முற்றிலும் புது மனுஷனாக மாறுகிறான்.

Malcare WordPress Security