(A summary of the Sunday morning teaching on 13-Dec-15, in AFT Church, English service. From the series The Foundation For Victorious Living)
“அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்” (1 யோவான் 3:16-18).
அன்பைக் குறித்த இந்த தொடர் போதனையிலே முதலில் தேவனுடைய அன்பைக் குறித்து போதித்தோம். இப்போது நாம் ஒருவரிலொருவர் எப்படி அன்புகூருவது என்பதை ‘அன்பிலே நடந்துகொள்வது’ என்கிற தலைப்பிலே போதித்து வருகிறோம். யோவான் இதைக் குறித்து தன்னுடைய நிருபத்தில் அதிகமாக எழுதுகிறார். ஆகவேதான் அவர் ‘அன்பின் அப்போஸ்தலன்’ என்று அழைக்கப்படுகிறார். 1 யோவான் 2,3,4 ஆகிய அதிகாரங்களில் அதிகமாக அன்பிலே வாழ்வதைக் குறித்து எழுதுகிறார். அவர், நாம் முன்பு பிசாசின் பிள்ளைகளாக இருந்தோம், இப்போது இரட்சிக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளாகி விட்டோம், நாம் ஒளிக்குள் இருக்கிறோம், ஆகவே ஒளியிலே நடக்க வேண்டும் என்று போதிக்கிறார். ஒரு தகப்பனுடைய சுபாவம் எப்படி பிள்ளைகளுக்கு இருக்கிறதோ அதுபோலவே அன்பாகவே இருக்கிற தேவனுடைய பிள்ளைகளாய் நாம் இருக்கிறபடியினாலே நாமும் அன்பினால் உண்டானவர்கள், அன்புதான் நம்முடைய அடையாளம் என்கிறார். சகோதர அன்பு ஒருவனிடத்தில் இருந்தால் அவன் தேவனுடைய பிள்ளை என்பதை நிரூபிக்கிறான். அவன் இப்போது முன்பு இருந்தது போல இல்லை, அவன் மாறி விட்டான். ஒருவனிடத்தில் சகோதர அன்பு இல்லையென்றால் அவன் தான் தேவனுடைய பிள்ளை அல்ல என்பதை நிரூபிக்கிறான் என்பதைத்தான் இப்படி போதிக்கிறார். இப்படிச் சொல்லிக் கொண்டு வரும்போது 3 ஆம் அதிகாரம் 16-18 வசனங்களில் நடைமுறை உதாரணத்தைக் கொண்டுவருகிறார். ஆஸ்தியுள்ள ஒருவனிடத்தில் குறைச்சலுள்ள சகோதரன் ஒருவனுக்கு அவன் தன் இருதயத்தை அடைத்துக் கொள்கிறான். அப்படிப்பட்டவனுக்குள் அன்பு எப்படி நிலைகொண்டிருக்க முடியும் என்று சொல்லி விட்டு, கல்வாரி சிலுவையில் தேவன் தம் குமாரனை எப்படி ஒப்புக்கொடுத்தார் என்பதைச் சொல்லி இதிலே அன்பு விளங்குகிறது என்று சுட்டிக் காண்பிக்கிறார்.
கடந்த போதனையிலே 18 ஆம் வசனத்திலிருந்து அன்புகூரக்கடவோம் என்றால் என்ன என்பதை தெளிவுபடுத்தினேன். யோவான் இந்த வசனங்களில் என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனிப்போம். 18 ஆம் வசனத்தில் வெறும் வாய்ப்பேச்சு அளவில் அல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம் என்கிறார். இதை நவீன விதத்தில், வெறும் Theoretical ஆக அல்ல, Practical ஆக அன்புகூருங்கள் என்று சொல்லலாம். Theory, Practice இரண்டுமே முக்கியம். Theory இன் அடிப்படையில்தான் Practice இருக்கிறது. இந்த போதனையிலே Theoretical ஆக அல்ல, Practical ஆக அன்புகூருங்கள் என்பதை காண்பிக்க விரும்புகிறேன். இதை வேத வசனம் பல இடங்களில் போதிக்கிறது. Theoretical கிறிஸ்தவர்களாக இருப்பது மிகவும் சுலபம். அதாவது, இவர்கள் கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பையும், அவர் மனுஷனாய் வந்தார் என்பதையும், அவர் பிசாசுகளைத் துரத்தி, வியாதியஸ்தரைச் சொஸ்தமாக்கி அற்புதங்களைச் செய்தார் என்பதையும், அவர் சிலுவையில் மரித்தார் என்பதையும், அவர் மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, பரமேறினார், திரும்பவும் வருவார் என்பதையும் நம்புவார்கள். ஆனால், அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தோமென்றால் இயேசு மீண்டும் வரப்போகிறார், கணக்கு கேட்கப் போகிறார், நியாயந்தீர்க்கப்போகிறார் என்ற உணர்வே இல்லாமல் வாழ்வார்கள். அவர்கள் அப்படி வாழ்வதின் அர்த்தம் என்னவென்றால், உண்மையாகவே அவர்கள் Theory ஐ நம்பவில்லை என்றுதான் அர்த்தம். Theory ஐ கேட்டு ரசித்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் கேட்ட காரியம் அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை உண்டுபண்ணவில்லை. இப்படி நடைமுறையில் மாற்றம் இல்லாததினால் அவர்கள் உண்மையாகவே விசுவாசிக்கவில்லை என்பது அர்த்தமாகிறது என்பதுதான் யோவானுடைய போதனை. இதைப் பற்றி வேத வசனம் பல இடங்களில் போதிக்கிறது.
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்” (மத்தேயு 7:21-27).
இந்த வேதப் பகுதியை வாசித்து விட்டு சிலர், இவர்கள் இயேசுவின் நாமத்தில் பிசாசுகளைத் துரத்தியிருக்கிறார்கள், அநேக அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள், அதெல்லாம் கணக்கில் இல்லையா? அவர்களையா அக்கிரமச்செய்கைக்காரரே என்று சொல்லுகிறார் என்று கேட்கிறார்கள். அற்புதங்கள் இயேசுவின் நாமத்தினால் நடந்தது. தேவனுடைய சித்தத்தின்படி செய்யாதவன் இயேசுவின் நாமத்தைப் பயன்படுத்தும்போது தேவன் அந்த நாமத்தைக் கனம்பண்ணி காரியங்களைச் செய்கிறார். அந்த நபர் மிகவும் சரியானவர் என்பதினால் அல்ல, அந்த நாமத்தைச் சொன்னதினால் காரியங்கள் நடக்கிறது. அதுபோலத்தான் இவர்களும் வெறும் வாயால் சொல்லுகிறவர்கள் மட்டுமே, அதின்படி செய்பவர்கள் அல்ல. இவர்கள் வாயினாலே கர்த்தாவே, கர்த்தாவே என்று அறிக்கை செய்து நாவினாலே மரியாதை செலுத்துபவர்கள், ஆனால் கிரியையினாலும் உண்மையினாலும் அதைச் செய்வது கிடையாது. ஆக, ஒருவர் என்ன சொல்லுகிறார் என்பது பெரிதல்ல, என்ன செய்கிறார் என்பதுதான் பெரிது. கர்த்தர், என் வார்த்தையின்படி செய்கிறவன் தான் என்னை உண்மையாக விசுவாசித்திருக்கிறான். அவன் அப்படிச் செய்யவில்லையென்றால் நம்பவில்லை என்று அர்த்தம் என்கிறார். இப்படிச் சொல்லிவிட்டுத்தான், ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது என்கிறார். இங்கு கன்மலையின்மேல் வீட்டைக் கட்டினவன் என்று சொல்லும்போது, உலகத்தில் கட்டிய வீட்டைப் பற்றிச் சொல்லவில்லை. அவருடைய வார்த்தைகளின்படி கேட்டு அதன்படி செய்கிறவனை அப்படிச் சொல்லுகிறார். அவனுக்கு பிரச்சனைகள் வரலாம், அவன் போராட்டங்களையும் சவால்களையும் சந்திக்கலாம், ஆனால் அவனுடைய வாழ்க்கை அசையாது, விழாது, உறுதியாயிருக்கும். அவனுடைய கிறிஸ்தவ நம்பிக்கை உண்மை என்பது நிரூபணமாகும். ஒருவர், “நான் நம்பிப் பார்த்தேன், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை, இப்போது விட்டு விட்டேன்” என்றார். அவர் உண்மையாக நம்பவில்லை, உண்மையாக நம்பியிருந்திருந்தாரென்றால் அது உண்மைதான் என்று நிரூபணமாயிருக்கும். நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கை எவ்வளவு உறுதியானது என்றால், நாம் உண்மையாய் நம்பி அதின்படி செய்தால் அது உண்மை என்று அதுவே நம் வாழ்க்கையில் நிரூபணமாகும். இது அவ்வளவு உறுதியான காரியம். ஒருவர், “விசுவாசம் சிலருக்கு வேலை செய்யும், சிலருக்கு வேலை செய்யாது” என்று சொல்லுகிறார். கிடையாது! தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதின்படி செய்கிறவன் எவனோ அவனுடைய வாழ்க்கை தோல்வியடையாது, அவன் எவ்வளவு கீழே இருந்தாலும் நிச்சயமாக மேலே வருவான். அவனுக்கு இந்த வார்த்தைகள் மெய்யென்று நிரூபிக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. இது உண்மை என்பதை நாம் நிரூபிக்க வேண்டியதில்லை. நாம் கேட்டு அதின்படி செய்தால்போதும் அதுவே நிரூபித்து விடும். கேட்கிறவர்கள் அநேகர், ஆனால் செய்கிறவர்களோ சிலர் மாத்திரமே. இவர்கள் கேட்கிறார்கள், ஆனால் உண்மையாகவே இதை நம்புகிறவர்கள் அல்ல. உண்மையாகவே நம்புகிறவர்களாக இருந்தால் அதை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
மத்தேயு 25 ஆம் அதிகாரத்தில் இயேசு மூன்று உதாரணங்களைக் கொடுக்கிறார். அதில் முதலாவது பத்து கன்னிகைகளைக் குறித்த உதாரணம். இவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள், ஐந்து பேர் புத்தியில்லாதவர்கள். புத்தியுள்ளவர்கள் கேட்டு செய்பவர்கள். புத்தியில்லாதவர்கள் கேட்டு செய்யாதவர்கள், வெறுமனே கேட்பவர்கள். புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளுக்கு எண்ணெய் குறைந்து போயிற்று. அவர்கள் எண்ணெய் வைத்திருந்த புத்தியுள்ள கன்னிகைகளிடம் தங்களுக்கு எண்ணெய் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்கு அவர்கள், எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்தில் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். அவர்கள் எண்ணெய் வாங்கி வரச் சென்ற நேரத்தில் மணவாளன் வந்து விட்டார்.
“அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்” (மத்தேயு 25:10-13).
புத்தியில்லாத கன்னிகைககள் ஆண்டவரே, ஆண்டவரே என்கிறார்கள். இவர்களுடைய பேச்செல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் அதன்படி செய்கிறவர்கள் அல்ல. இவர்கள் மணவாளனுக்காக விழித்திருப்பதை Serious ஆக செய்யவில்லை. அது எதைக் காண்பிக்கிறது என்றால், இவர்களுக்கு மணவாளனைக் குறித்தும், அவர் நிச்சயமாக வருவார் என்பதைக் குறித்தும் Seriousness கிடையாது. அதைக் குறித்த நிச்சயமுள்ளவர்களாய் இருந்திருந்தால் எண்ணெய் குறைந்து போய் விட்டதே, மணவாளன் எந்நேரமும் வந்து விடுவார், ஆகவே, சீக்கிரம் எண்ணெய் வாங்கி வந்து, ஊற்றி ஆயத்தமாய் வைத்திருப்போம் என்று அப்படிச் செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் உண்மையாய் நம்பாததினால் அப்படிச் செய்யவில்லை. ஆகவே, மணவாளன் அவர்களிடம், நான் உங்களை அறியேன் என்கிறார். இவர்கள் ஆண்டவரே, ஆண்டவரே என்று வாய் அளவில் சொல்லுகிறவர்கள், ஆனால் கிரியையினாலோ உண்மையாக அவரைப் பின்பற்றாதவர்கள். உண்மையாகவே மணவாளனை எதிர்பார்த்து இராதவர்கள்.
இரண்டாவது உதாரணம், தாலந்தைக் குறித்த கதை. புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு எஜமான் தன் ஊழியக்காரர் மூவரை அழைத்து, ஒருவரிடம் பத்து தாலந்தும், இன்னொருவரிடம், இரண்டு தாலந்தும், மற்றவரிடம் ஒரு தாலந்தும் கொடுத்து விட்டுச் செல்கிறார். ஐந்து தாலந்து வாங்கினவன் அதை பத்து தாலந்தாகவும், இரண்டு தாலந்து வாங்கினவன் அதை நான்காகவும் ஆக்கிவிட்டான். ஒரு தாலந்து வாங்கினவன் அதை என்ன செய்தான் என்பதைப் பார்ப்போம்.
“ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி, அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்” (மத்தேயு 25:24-30).
அவனை புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள் என்று எஜமான் சொல்லுகிற அளவிற்கு அவன் என்ன பெரிதாக செய்து விட்டான்? அவன் தன் செய்கையினாலே தான் உண்மையுள்ள ஊழியக்காரன் அல்ல என்பதை நிரூபித்து விட்டான். இவன் வாய் அளவில் ஒரு வேலைக்காரனாக இருக்கிறான். ஆனால் கிரியையில் அதை காண்பிக்கவில்லை, உண்மையாய் அதைச் செய்யவில்லை. வேலைக்காரனாக இருக்கிறான், ஆனால் இவனால் எந்த பிரயோஜனமுமில்லை. நாம் இந்த பூமியில் பிரயோஜனமுள்ளவர்களாக இருக்கும்படித்தான் தேவன் நம்மை வைத்திருக்கிறார். அதற்குத்தான் சில தாலந்துகளை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் அதை எடுத்து எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்தி, கர்த்தர் என்னவெல்லாம் செய்யச் சொல்லுகிறாரோ அதையெல்லாம் செய்து முடிக்க வேண்டும். அதுதான் நம்முடைய வேலை. அப்போது நாம் பிரயோஜனமுள்ளவர்களாய் இருப்போம். ஆனால் நம்மிடத்தில் என்ன தாலந்து இருக்கிறது என்பதை அறியாமலும், அதை வளர்த்துக் கொள்ளாமலும் இருக்கும்போது அது, நாம் கர்த்தரோடு நெருக்கமான ஒரு வாழ்க்கை வாழவில்லை என்பதையும், அவருடைய வழிகளில் நடக்கவில்லை என்பதையும் காண்பிக்கிறது. ஆனால் நாம் உண்மையாக அவரை விசுவாசித்து, அவரோடு நெருக்கமாக ஜீவித்திருந்தோமென்றால் நாம் யார் என்பதையும், நமக்குள் என்ன வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டு, அதை கர்த்தருக்காக பயன்படுத்தியிருப்போம், பிரயோஜனமுள்ள ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்போம். ஒரு தாலந்தை வாங்கி அதை அப்படியே வைத்திருந்தவன் செய்கிறவன் அல்ல, வாய் அளவில் சொல்லுகிறவன்.
மூன்றாவது உதாரணம், இயேசு நியாயத்தீர்ப்பைப் பற்றிச் சொல்லுவது.
“அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (மத்தேயு 25:41-45).
இடது பக்கத்தில் நிற்கிறவர்களுடைய பிரச்சனை என்ன? இவர்கள் எதுவும் செய்யவில்லை என்பதுதான். இவர்கள் பசியுள்ளவர்களுக்கு ஆகாரத்தையும், தாகமுள்ளவர்களுக்கு தண்ணீரையும், வஸ்திரமில்லாதவர்களுக்கு வஸ்திரத்தையும் கொடுக்கவில்லை. ஆண்டவர் அவர்களிடம், நான் பசியாயிருந்தேன், தாகமாயிருந்தேன், வஸ்திரமில்லாதிருந்தேன் எனக்கு எதுவும் செய்யவில்லை என்கிறார். அதற்கு அவர்கள், ஆண்டவரே நீர் அப்படி வந்திருந்தால் நாங்கள் செய்திருப்போமே, நீர் எப்போது வந்தீர் என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்றார். கிறிஸ்தவ அன்பு என்பது practical matter. இப்படி இயேசு செய்வதை வலியுறுத்துகிறார்.
இங்கு செய்வதை வலியுறுத்துகிறதால் சிலர், ஒரு கிரியையின் மூலமாக உண்டாகிற இரட்சிப்பை அல்லவா வேதம் போதிக்கிறது. ஆண்டவர் கிரியையை மேன்மைப்படுத்துகிறார். ஒருவன் வெறுமனே கேட்கிறான், கர்த்தாவே! கர்த்தாவே! என்கிறான் ஆனால் அதன்படி செய்யவில்லை. இப்போது நாம் பார்த்த மூன்று உதாரணங்களும் செய்வதையே வலியுறுத்துகின்றன. ஆகவே, இரட்சிப்பு செய்வதில்தான் இருக்கிறது என்பதை அல்லவா காண்பிக்கிறது என்கிறார்கள். மேலும், வேத வசனத்தில் இரண்டு விதமாகச் சொல்லியிருக்கிறது. ஒன்று, உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றியே பேசுகிறது. இன்னொரு பக்கம், வெளியே என்ன செய்கிறோம் என்பதைப் பற்றியே பேசுகிறது. இப்படி வேதம் இரண்டையும் பேசுகிறது. அப்படியென்றால், நான் உள்ளத்தில் என்ன விசுவாசிக்கிறேன் என்பதை வைத்து இரட்சிப்பா? அல்லது வெளியே என்ன செய்கிறேன் என்பதை வைத்து இரட்சிப்பா? என்று கேட்கிறார்கள்.
“நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை” (1 கொரிந்தியர் 13:1-3).
இங்கு செய்கை ஒன்றுமில்லை என்பது போலவும், உள்ளே இருக்கிற அன்புதான் பெரிது என்பது போலவும் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நாம் பார்த்த மூன்று வேதப்பகுதிகளும் ஒருவன் செய்கையில் அன்பை காட்டாவிட்டால் உள்ளே ஒன்றுமில்லை என்று சொல்லுகிறது. யோவானும் அதைத்தான் சொல்லுகிறார். ஆனால் இங்கோ, வெளியே செய்கையில் எவ்வளவு கிரியையைக் காட்டினாலும் உள்ளே அன்பு இல்லாவிட்டால் ஒன்றுமில்லை என்பது போல இருக்கிறது. இதற்கு உதாரணமாக இன்னும் சில வசனங்களைக் காண்பிக்கலாம். மத்தேயு 21:28-31 இல் இரண்டு குமாரர்களைப் பற்றிய கதையை வாசிக்கிறோம். ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள், அவர் திராட்சத்தோட்டம் வைத்திருந்தார். மூத்தவனை அழைத்து, நீ திராட்சைத் தோட்டத்திற்குப் போய் வேலை செய் என்கிறார். அவன், நான் போகமாட்டேன் என்கிறான். இளையவனிடத்திலும் அப்படியே சொல்லுகிறார். அவன் போகிறேன் என்கிறான். இங்கு பிரச்சனை என்னவென்றால், போகமாட்டேன் என்று சொன்னவன் மனம் மாறி போய்விட்டான். போகிறேன் என்று சொன்னவன் போகாமல் இருந்து விட்டான். இயேசு எப்படிப்பட்ட கதையைச் சொல்லுகிறார் என்பதை கவனியுங்கள். அவர் இந்த கதையை பரிசேயருக்குச் சொல்லுகிறார். ஆயக்காரர்கள், வேசிகள் இப்படிப்பட்டவர்கள் போகமாட்டேன் என்று சொன்னவர்கள். பரிசேயர்கள் அவர்களை பாவிகள், அக்கிரமக்காரர்கள், பொல்லாதவர்கள் என்று சொல்லி, வெறுத்து, கீழானவர்களாக பார்த்து, அவர்கள் தேவனுக்குப் பிரியமில்லாதவர்கள் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் நான் போகமாட்டேன் என்று சொன்னவர்கள் தான். அவர்களைப் பார்க்கும்போது கெட்டவர்கள் போல் தெரிகிறார்கள். ஆனால் யோவான் ஸ்நானகனின் பிரசங்கத்தைக் கேட்டு இப்படிப்பட்டவர்களில் அநேகர் மனந்திரும்பி ஞானஸ்நானம் எடுத்து விட்டார்கள். ஆனால் இந்த பரிசேயரோ, போகிறேன் என்கிறவர்கள். 30 ஆம் வசனத்தில் போகிறேன் என்று சொன்னவன் போகிறேன் ஐயா என்றான். அவன் மிகவும் கூடுதல் மரியாதையோடு அப்படிச் சொல்லுகிறான். அவன் அப்படிச் சொல்லுவதிலேயே அவன் போகமாட்டான் என்பது விளங்குகிறது. இயேசு பரிசேயர்கள் அப்படிப்பட்டவர்கள் என்றும், போகமாட்டேன் என்று சொன்ன ஆயக்காரர், வேசிகள் இவர்கள் போகிறார்கள் என்றும் சொல்லுகிறார். இயேசு போகிறவனை அதாவது, வெளிப்புறமான செய்கைகளை மேன்மைப்படுத்திச் சொல்லுகிறார்.
“என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்…” (யோவான் 14:21-24).
இங்கு வெளிப்புறமான காரியங்கள் வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளது. 1 கொரிந்தியர் 13 ஆம் அதிகாரத்திலோ உள்ளே அன்பு இல்லாமல் வெளியே அநேக காரியங்களைச் செய்தாலும் அது பிரயோஜனமில்லை என்று சொல்லுகிறது. ஏன் இப்படி இரண்டு விதமாக வேத வசனம் சொல்லுகிறது என்பதை கவனிக்க வேண்டும். இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஒரு காரியத்தை புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக நாம் அன்பு என்ற வார்த்தையை எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறோம். I love pizza, I love cat, I love my dog என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக I love my wife என்று சொல்லுகிறோம். அப்படியென்றால், Pizza,Cat, Dog,Wife எல்லாம் ஒன்றா? இப்படி அன்பைப் பற்றி ஒரு பெரிய குழப்பம் உள்ளது. அன்பு என்றால் என்னவென்று சரியாக புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு அந்த வார்த்தையை உபயோகப்படுத்தி விட்டோம். ஆனால் உண்மையில் அன்பினுடைய சுபாவம் என்ன? அன்பு எப்படிப்பட்டது? ஒருவனுக்குள் உண்மையான அன்பு இருந்தால் அது செயலில் வெளிப்படும். வேத வசனம் உள்ளே இருக்கிற அன்பையும், வெளியே இருக்கிற செய்கையையும் ஏன் சொல்லுகிறது என்றால், அன்பு செயல் இல்லாமல் இருக்காது. உள்ளே அன்பு இருந்தால் அது செயலிலும் இருக்கும். ஆக, உள்ளே இருக்கும் அன்பும் முக்கியம், வெளியே இருக்கிற செயலும் முக்கியம். அன்பு என்றால் வெறும் வாயினால் சொல்லுவதல்ல, அதை செயலில் காண்பிக்க வேண்டும்.
லூக்கா 7 ஆம் அதிகாரத்தில் பரிசேயன் ஒருவன் இயேசுவை தன் வீட்டிற்கு போஜனம்பண்ணும்படி அழைத்து, அவரும் அவனுடைய வீட்டிற்குச் சென்ற சம்பவத்தை வாசிக்கிறோம். இயேசு அங்கு பந்தியிருக்கிறார். அப்போது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்தீரீ இயேசு பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதைக் கேள்விப்பட்டு, பரணியில் பரிமள தைலத்தை கொண்டு வருகிறாள். அவள் கண்ணீரோடு வருகிறாள், அவளுடைய உள்ளம் நன்றியினால் பொங்குகிறது. ஏனென்றால், இவர் பாவங்களை மன்னிக்கிறவர், அவளை நேசித்திருக்கிறார். எல்லாரும் அவளை வெறுத்து, கீழ்த்தரமாக எண்ணுகிறார்கள். ஆனால் இயேசுவோ, அவளை ஏற்றுக்கொண்டு, மன்னித்திருக்கிறார். ஆகவே அவளுக்கு இயேசுவின் மீது மரியாதையும் அன்பும் இருக்கிறது. அவள் தன் கண்ணீரினால் இயேசுவின் பாதத்தை நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசுகிறாள். அக்காலத்திலே பரிசேயர்கள் இப்படிப்பட்ட ஸ்திரீ தங்களுக்கு எதிரே வந்தால் அவர்கள் வேறு பக்கம் சென்று விடுவார்கள். ஆனால் இப்போது அவள் வீட்டிற்குள்ளேயே வந்து விட்டாள். அதுமட்டுமல்லாமல், அக்காலத்திலே பாவியாகிய அவள் செய்த காரியங்கள் மிகவும் அசிங்கமான காரியங்கள் (offensive things). அந்தப் பரிசேயன் அதைக் கண்டு, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். அப்போது இயேசு அவனிடத்தில் ஒரு கதையைச் சொல்லுகிறார்.
“அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி, ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப்பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள். நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்று சொல்லி; அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்” (லூக்கா 7:41-48).
இங்கு இயேசு கொடுக்கிற விளக்கத்தைக் கவனிக்கவும். அவர் சொல்ல வருகிற காரியம் என்னவென்றால், அன்பு உள்ளத்தில் இருந்தால் நிச்சயமாக அது வெளியே வரும் என்பதுதான். அந்த பரிசேயனுக்குள்ளே அன்பு இல்லாததினால் வெளியே எதுவும் நடக்கவில்லை. இயேசு அவனிடம், நீ எனக்கு கால் கழுவுவதற்கு தண்ணீர் தரவில்லை, எந்த மரியாதையும் செலுத்தவில்லை என்று சொன்னதின் மூலமாக உன்னிடம் அன்பே இல்லை என்பதை சொல்லாமலே சொல்லி விட்டார். ஆக, அன்பினுடைய சுபாவம் என்ன? அது உள்ளே இருக்கிறது, நிச்சயமாக அது செயலில் வெளிப்படும். செயலில் வெளிப்படாவிட்டால் உள்ளே இல்லை என்பதுதான் உண்மை.
“ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?” (1 யோவான் 3:17).
அடைத்துக்கொண்டால் என்பதை ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு, “shuts up his bowels of compassion” என்று மொழிபெயர்க்கிறது. அதாவது, அவன் தன் இருதயத்தை எந்த இரக்கமும் காட்டாமல் அடைத்துக் கொள்கிறான் என்று அர்த்தம். அப்படி நன்மை செய்யாமல் தன் இருதயத்தை அடைத்துக் கொள்ளுகிற மனுஷன் அதன் மூலம் தனக்குள் அன்பு இல்லை என்பதை காண்பிக்கிறான். அவன் அன்பை வெறும் Theory ஆக நம்புகிறான். அவன் அன்பைப் பற்றிச் சொல்லுகிற கருத்துக்களையும், பிரசங்கங்களையும், விளக்கங்களையும் ரசித்து மகிழுவான். ஆனால், அதை நடைமுறையில் கொண்டுவர மாட்டான். அதுதான் அங்கு பிரச்சனை. யோவான் 16 ஆம் வசனத்தில் சொல்லுவதைக் கவனிப்போம்.
“அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1 யோவான் 3:16).
யோவான், அன்பு என்றால் என்னவென்று விளங்க வேண்டுமென்றால், அவர் தம்முடைய ஜீவனை எப்படி நமக்காகக் கொடுத்தார் என்பதை கவனியுங்கள் என்கிறார்.
“அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர் 2:5-8).
இயேசுவினுடைய அன்பு எப்படி வெளிப்படுகிறது என்பதை கவனியுங்கள். பரலோகத்திலிருந்த அவர் நாம் பாவத்துக்கும் பிசாசுக்கும் அடிமைகளாயிருக்கிறோம் என்பதை பார்த்தார். அதைப் பார்த்து விட்டு அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருக்க முடியவில்லை. அன்பு அவரை ஏவுகிறது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தார், தேவனுக்குச் சமமாயிருந்தார். ஆனால், அவர் அதையெல்லாம் பொருட்டாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானார். தேவனுக்குச் சமமாயிருந்தவர், தேவனோடிருந்தவர், தேவனாகவே இருந்தவர், தேவகுமாரன் நம்முடைய நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டு, அன்புகூர்ந்து நமக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தனக்கு உள்ளதையெல்லாம் வெறுத்து, அதையெல்லாம் ஒதுக்கி தள்ளி வைத்து விட்டு, எல்லாவற்றையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் மனுஷ ரூபமெடுக்கிறார். நாம் மீட்கப்படும்படியாக அங்கிருந்து இறங்கி பூமிக்கு வருகிறார். இந்த பூமியில் பிறந்து, வாழ்ந்து, தன்னைப் பற்றி எதுவும் யோசிக்காமல் சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். சிலுவை வரைக்கும் போய், அங்கு இரத்தம் சிந்தி, மரித்து நமக்காக மீட்பை உண்டுபண்ணினார். இதிலே தேவ அன்பு என்னவென்று விளங்குகிறது. அன்பு பார்த்து விட்டு எதுவும் செய்யாமல் இருக்காது, அது ஏதாவது செய்யும். அவர் பார்த்தார், இறங்கி வந்தார், சிலுவையில் மரித்தார்.
யோவான் இதைச் சொல்லி விட்டு, “நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” என்கிறார். அன்பு என்றால் சகோதரருக்காக ஜீவனையே கொடுக்கக் கடனாளிகளாய் இருப்பதாகும். ஆதி திருச்சபையில் அப்படி நடந்தது. அவர்கள் இயேசுவுக்காக ஜீவனைக் கொடுத்தது மட்டுமல்லாமல், அநேக நேரங்களில் மற்றவர்களுக்காக தங்களுடைய ஜீவனைக் கொடுத்திருக்கிறார்கள். ஜீவனையே கொடுக்க ஆயத்தமாயிருக்க வேண்டுமென்றால் சில சிறிய காரியங்களைச் செய்வதிலே எந்தப் பிரச்சனையும் கிடையாது. ஆக, அன்பு என்பது வாய் அளவில் அல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் காண்பிக்கப்பட வேண்டும். அந்த அன்பைத்தான் இயேசு காண்பித்தார். நாமும் அதைத்தான் காண்பிக்க வேண்டும் என்று வேதம் போதிக்கிறது. இந்த அன்பை நம் வீட்டில் நடைமுறைப்படுத்தினோம் என்றால் நம் வீடு பரலோகமாகி விடும்.