(A summary of the Sunday morning teaching on 31-Jan-16, in AFT Church, Tamil service. From the series The Foundation For Victorious Living)
நியாயத்தீர்ப்பு நாளில் தைரியம்
“தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான்,தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (1 யோவான் 4:16-18).
நாம் ஒருவரிலொருவர் அன்புகூருவதைப் பற்றி கடந்த பல வாரங்களாக “அன்பிலே நடந்துகொள்வது” என்கிற தலைப்பிலே போதித்து வருகிறோம். யோவான் அன்பைக் குறித்து அதிகமாக எழுதுகிறார். அவர் இயேசுவோடு கூட இருந்த சீஷன். சபை பிறந்து,வளர்ந்து, பெருகி, பரவினதை முதல் நூற்றாண்டில் கண்ணாரக் கண்டவர். முதல் நூற்றாண்டின் முடிவில் வயோதிப மனுஷனாக கிறிஸ்தவ வாழ்க்கையிலே முக்கியமான காரியம் என்னவென்பதை வலியுறுத்தி இந்த நிருபத்தில் எழுதுகிறார்.ஆகவே தேவனுடைய அன்பைக் குறித்தும், நாம் எப்படி ஒருவரிலொருவர் அன்புகூருவது என்பதைக் குறித்தும் இங்கு எழுதுகிறார். 1 யோவான் நிருபத்தில் நாம் ஒருவரிலொருவர் அன்புகூருவது எப்படி என்பதைக் குறித்து அநேக வேதப் பகுதிகள் சொல்லப்பட்டிருக்கிறபடியினாலே இதிலே பல பகுதிகளை நாம் பார்த்து வருகிறோம்.
கடந்த வாரம் “அன்பிலே நிலைத்திருப்பது” என்பதைக் குறித்துப் பார்த்தோம். தமிழ் வேதாகமத்தில் ‘நிலைத்திருப்பது’ என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.ஆங்கில வேதாகமத்திலே ‘dwelling’ என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.அதாவது, ‘குடியிருப்பது’, ‘வசிப்பது’ என்பது அதன் அர்த்தம். நாம் பள்ளி, கல்லூரி,அலுவலகம் போன்ற இடங்களுக்குச் சென்று வருகிறோம். ஆனால் அங்கேயே நாம் வசிப்பதில்லை, வீட்டில்தான் வசிக்கிறோம். ஆக, அன்பு என்பது விசுவாசி எப்போதும் இருக்கிற நிலை என்கிற விதத்தில்தான் ‘dwell’ என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. யோவான், நிலைத்திருப்பது என்று சொல்லும்போது விசுவாசி எப்போதும் அன்பிலே வாழுகிறான், அன்புதான் அவனுடைய வாழ்க்கையிலே ஆளுகிறது என்கிற விதத்தில் சொல்லுகிறார். நாம் அன்பிலே நிலைத்திருக்க வேண்டுமென்றால் நம்மை ஒழுங்குபடுத்த வேண்டியதாய் (self discipline) இருக்கிறது.அதில் முக்கியமாக நம்முடைய நாவை discipline பண்ண வேண்டியதாய் இருக்கிறது.அநேக வேளைகளில் அன்பு கெடுவதற்குக் காரணம் நாம் வாயைத் திறந்து பேசும் வார்த்தைகள் தான். “சிறிய நெருப்பு பெரிய காட்டைக் கொளுத்துகிறது” என்று யாக்கோபு 3 ஆம் அதிகாரத்தில் நாவைப் பற்றிய அநேக காரியங்களை வாசிக்கிறோம்.நாம் அன்பு என்னும் சூழலில் வாழவும், அன்பு நம்முடைய வாழ்க்கையில் ஆளவும் வேண்டுமென்றால் நாம் என்ன பேசுகிறோம் என்பதை கவனித்து சரி செய்ய வேண்டும்.தவறான காரியங்களைப் பேசிவிட்டு அன்பின் சூழலில் வாழ முடியாது. அன்பின் சூழலில் வாழ வேண்டுமென்றால் நம்முடைய நாவை நிச்சயமாக discipline பண்ண வேண்டியதாய் இருக்கிறது. இதையெல்லாம் கடந்த போதனையிலே நாம் பார்த்தோம்.
1 யோவான் 4:16,17,18 ஆகிய வசனங்களில் விசுவாசி அன்பிலே நிலைத்திருக்கிறதின் மூலமாக ஏற்படக்கூடிய மூன்று விளைவுகளைப் பற்றி யோவான் சொல்லுகிறார்.அதிலே மூன்றாவது விளைவைப் பற்றி இங்கு விளக்கமாக பார்க்க இருக்கிறோம்.முதலாவது, நாம் அன்பிலே நிலைத்திருக்கும்போது ஒருவரிடத்திலொருவர் காட்டுகிற அன்பு நாம் தேவனுக்குள் இருக்கிறோம், தேவன் நமக்குள் இருக்கிறார் என்பதற்கு முடிவான, தீர்க்கமான அத்தாட்சியாய் இருக்கிறது. ஒருவரிடத்திலொருவர் காட்டுகிற அன்பு என்று சொல்லும்போது அது எந்த அன்பு என்று நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சிலர், நான் என் குடும்பத்திலும், உறவினரிடத்திலும், எனக்குத் தெரிந்தவர்களிடத்திலும் அன்பாயிருக்கிறேன் என்று சொல்லலாம். இங்கு அந்த அன்பைப் பற்றிச் சொல்லவில்லை. அது ஒரு சாதாரண மனுஷீக அன்பு. அது மிருகங்களிடம்கூட இருக்கிறது. கோழி தன் குஞ்சுகளையும், நாய் தன் குட்டிகளையும் நேசிக்கிறது. அவைகளுக்கு நேசிக்கும்படி யாரும் போதிக்கவில்லை. அது தேவன் மிருகங்களுக்குள் இயற்கையாய் வைத்திருக்கிற ஒரு தன்மை (animal instinct). அதே தன்மையை தேவன் நமக்குள்ளும் வைத்திருக்கிறார். சில விதங்களில் நாமும் மிருகமும் ஒன்றாக இருக்கிறோம். ஆனால் நாம் மிருகம் அல்ல, நமக்கும் அவற்றிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதே நேரத்தில் சில விதங்களில் ஒற்றுமைகள் இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஒருவன் பார்ப்பதற்கு நல்லவன் போன்று தெரியவில்லை. இருந்தபோதும் அவன் தன் மனைவியினிடத்திலும்,பிள்ளைகளிடத்திலும் பாசம் வைத்திருக்கிறான். தன் குடும்பமும், உறவினர்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறான். இவையெல்லாம் தேவன் மனுஷனுக்குள் இயற்கையாய் வைத்திருப்பவை. இது இயற்கை அன்பு. இது எல்லா மனுஷருக்குள்ளும் இருக்கிறது, மிருகத்திற்குள் கூட இருக்கிறது. இந்த அன்பு ஒருவனுக்குள் இருந்தாலே அவன் பரிசுத்தவான் என்றாகி விடாது. நாம் போதிப்பதோ தெய்வீக அன்பு. தெய்வீக அன்பு என்பது சத்துருக்களையும் நேசிக்கிற அன்பு. நமக்கு தீங்கு செய்கிறவர்களுக்கு நன்மை செய்கிற அப்படிப்பட்ட அன்பு. நம்மை கெடுத்துப் பேசி,அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு, அவர்களுக்காக ஜெபித்து, அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புகிற அப்படிப்பட்ட அன்பு. அது ஒரு மனுஷனுக்குள் இருக்குமானால் அதுவே அவனுக்குள் தேவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. ஒருவனுக்குள் தேவனுடைய அன்பு இல்லாமல் அவன் அப்படி இருக்கவே முடியாது. ஏனென்றால், சாதாரண இயற்கை மனுஷனாக இருந்துகொண்டு அப்படியெல்லாம் இருக்க முடியாது. ஏனென்றால், இயற்கை மனுஷன் தனக்கு நல்லது செய்பவர்களுக்கு மட்டும் நல்லது செய்வான். ஆனால், ஒருவன் சத்துருவை நேசிக்கிறான் என்றால் அது இயற்கை அன்பு அல்ல, அது தெய்வீக அன்பு.ஆக, முதல் விளைவாக நாம் ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிறோம் என்பது அது தேவன் நமக்குள் இருக்கிறார் என்பதற்கும், நாம் தேவனுக்குள் இருக்கிறோம் என்பதற்கும் முடிவான அத்தாட்சியாயிருக்கிறது.
இரண்டாவது விளைவு, நாம் ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிறோம் என்பது தேவனுடைய அன்பு நமக்குள் இருக்கிறது என்பது மட்டுமல்ல, அது நாளுக்கு நாள் நமக்குள்ளே பெருகி, வளர்ந்து, பூரணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாயிருக்கிறது. தேவன் நம்மை இரட்சித்ததின் நோக்கம் நம் பாவத்தை மன்னிக்கிறதற்காக மட்டுமல்ல, நம்மை அவருடைய குமாரனைப்போல மாற்றுவதற்காகத்தான். அதற்காகத்தான் அவர் இந்த உலகத்திற்கு வந்து, தம்முடைய ஜீவனைக் கொடுத்தார். வேத வசனம் இதை திட்டவட்டமாகப் போதிக்கிறது. 1 யோவான்4:9,10,11 ஆகிய வசனங்களில் அதைத்தான் நாம் வாசிக்கிறோம்:“தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்”. தேவன் இயேசுவை கல்வாரி சிலுவையிலே பலியாக கொன்றதிலே தேவனுடைய அன்பு வெளிப்பட்டது. தேவன் எப்படி அன்புகூர்ந்தாரோ அதே விதமாய் நாமும் அன்புகூரத்தக்கவர்களாய் மாறும்படியாகத்தான் நம்மை இரட்சித்தார் என்று வேதம் திட்டவட்டமாக நமக்குப் போதிக்கிறது. ஆகவே பாவமன்னிப்பையும், தேவனுடைய சுபாவத்தையும் பெற்றோம் என்பது மட்டுமல்ல, நாம் தேவனைப் போலவே மாறிவிட வேண்டும் என்பதுதான் தேவனுடைய நோக்கமாயிருக்கிறது.
“அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (தீத்து 2:14).
இங்கு தமிழ் வேதாகமத்தில் ‘சொந்த ஜனங்கள்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சில ஆங்கில மொழிபெயர்பு வேதாகமத்தில், ‘peculiar people’என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ‘விநோதமான’, ‘வித்தியாசமான’, ‘வேறெங்கும் பார்க்க முடியாத ஜனம்’ என்று அர்த்தம். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது அவரைப் போன்று எவரும் இல்லை. அவர் முற்றிலும் வித்தியாசமானவராய் இருந்தார். அவர் காட்டின அன்பை யாரும் காட்டவில்லை.ஆகவேதான் அவரிடத்தில் பார்த்த இந்த அன்பை விவரிப்பதற்கு கிரேக்க மொழியிலே வார்த்தையே இல்லையாம். கிரேக்க மொழியில் கணவன்–மனைவியினிடத்தில் காட்டும் அன்பிற்கும், குடும்பத்தில் காட்டும் அன்பிற்கும், நண்பர்களிடத்தில் காட்டும் அன்பிற்கும் தனித்தனி வார்த்தைகள் இருந்தது. ஆனால் இயேசு காட்டின அன்போ முற்றிலும் வித்தியாசமானது. அவரை சிலுவையில் அறைந்தபோது, “பிதாவே,இவர்களுக்கு மன்னியும். இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்”என்று தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கிறார். அவருக்கு முன்பாக ஒரு பாவியான ஸ்திரீயை நிறுத்தி கல்லெறிய வேண்டும் என்கிறார்கள். ஆனால் இவரோ அன்புகூருகிறார். சகேயு என்ற ஆயக்காரனை ஜனங்கள் வெறுக்கிறார்கள். ஆனால் இவரோ, “சகேயுவே, நான் உன் வீட்டிற்கு வரவேண்டும்” என்கிறார். ஜனங்கள் அதைக் கண்டு முறுமுறுக்கிறார்கள். ஏனென்றால், யாருமே நேசிக்காதவனை இவர் நேசிக்கிறாரே! ஜனங்களுக்கு இது விளங்கவில்லை. இதுதான் peculiarity. இதுவரைக்கும் எவரும் காட்டாத, எந்த மனுஷனிடத்திலும் பார்க்க முடியாத அன்பை இவரிடத்தில் பார்க்க முடிந்தது. இவர் அப்பேர்ப்பட்ட ஒரு மனுஷனாக, விசேஷமானவராக இருக்கிறார். அவரைப் பார்த்தால் தேவகுமாரனென்று விளங்குகிறது. அவரை சிலுவையில் அறைந்த போர்ச்சேவகன், “இவர் நிச்சயமாக தேவகுமாரனாகத்தான் இருக்க வேண்டும். இவரைப் பார்த்தால் சாதாரண மனுஷனாக தெரியவில்லை. இவர் மனுஷனிலேயே வித்தியாசமானவர்” என்கிறான். இப்படி ஒரு கூட்ட ஜனத்தை உண்டாக்க வேண்டும் என்றுதான் நம்மை அவருடைய சொந்த ஜனமாகவும்,நற்கிரியைகளைச் செய்வதிலே வைராக்கியமும், உறுதியும், தீர்மானமும் உடையவர்களாகவும் இருக்கும்படியாகத்தான் தேவன் நம்மை இரட்சித்தார் என்று வேத வசனம் சொல்லுகிறது. நாம் ஒருவரையொருவர் அன்புகூருகிறோம் என்பது நாம் எடுத்துக்காட்டான விதத்தில் வித்தியாசமானவர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாயிருக்கிறது. நாம் ஒருவரையொருவர் அன்புகூருகிறதின் மூலமாக அது தேவன் நம்மை இயேசுவைப் போலவே மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாயிருக்கிறது.
மூன்றாவது விளைவு, நாம் அன்பிலே வாழுவோமென்றால் நியாயத்தீர்ப்பு நாளிலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கும். நியாயத்தீர்ப்பு நாள் என்பது வேதத்திலே ஆரம்பம் முதல் கடைசி வரை சொல்லப்படுகிற ஒரு காரியம். அநேகர் நியாயத்தீர்ப்பு நாளை நம்புவதே கிடையாது. அவர்கள், நியாயத்தீர்ப்பு நாள் என்று ஒன்றும் கிடையாது. நாம் செத்தால் அதுதான் நியாயத்தீர்ப்பு. நாம் செய்ததெற்கெல்லாம் பலனை அடையப் போகிறோம். எதை விதைக்கிறோமோ அதை அறுப்போம், அதுதான் நியாயத்தீர்ப்பு என்கிறார்கள். மேலும், நியாயத்தீர்ப்பு நாள் இருக்கிறது என்பதையும், நியாயாதிபதி ஒருவர் இருக்கிறார், அவர் நியாயம் விசாரிப்பார் என்பதையும் அவர்கள் நம்புவதே கிடையாது. ஆனால் வேத வசனம் இதைக் குறித்து என்ன போதிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். உலகத்தின் முடிவிலே இயேசு திரும்ப வரும்போது வெளிப்படையாக, எல்லாரும் பார்க்கும் விதத்திலே முடிவாக நடத்தப்படும் நியாயத்தீர்ப்பு இருக்கிறது. அதற்கென்று ஒரு நாள் நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்த நாளிலே அவர் ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்று வேதம் திட்டவட்டமாக நமக்குப் போதிக்கிறது. வேதம் தேவனை சிங்காசனத்தில் உட்கார்ந்து நியாயந்தீர்க்கிற நியாயாதிபதி என்றும், அவர் உட்காருவார், புத்தகங்கள் திறக்கப்படும், அதிலே எழுதப்பட்டிருக்கிற காரியங்கள் அங்கு பரிசீலிக்கப்பட்டு, நியாயம் விசாரித்து கூறப்படும் என்றும் சொல்லுகிறது. அதுமட்டுமல்லாமல், நியாயத்தீர்ப்பு செய்யக்கூடிய அதிகாரத்தை தேவன் இயேசுவுக்கு கொடுத்திருக்கிறார் என்று சில குறிப்பிட்ட காரியங்களையும் வேதம் சொல்லுகிறது: “அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்”(யோவான் 5:27). இயேசு இந்த உலகத்திற்கு மாம்ச ரூபமெடுத்து வந்தார், மரித்தார், உயிரோடெழுந்தார். அவர் அழியாத, மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தோடு உயிரோடெழுந்தார். அப்போது அவர் தன்னுடைய மனுஷீகத்தை துறந்து விடவில்லை. மனுஷனாய் வந்தவர் இப்போது மனுஷனாய் இல்லை என்று சொல்ல முடியாது. இன்றைக்கும் அவர் மனுஷனாய் தான் இருக்கிறார். வேதம், “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே…”(1 தீமோத்தேயு 2:5, 6) என்று சொல்லுகிறது. இயேசு உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற பிறகு, நான் இனி மனுஷனாய் இருக்க வேண்டியதில்லை என்று சொல்லவில்லை. அவர் இன்றைக்கும் மனுஷனாகத்தான் இருக்கிறார். பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருந்து நமக்காக பரிந்து பேசுகிறவர் ஒரு மனுஷன்.
ஏன் அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால் நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது? ஒருவர் இதை அருமையாக வர்ணித்து, நியாயத்தீர்ப்பு நாளிலே நடக்கும் காட்சியை இப்படியாக விவரிக்கிறார்: திரள் கூட்ட ஜனங்கள் கூடியிருப்பார்கள். அப்போது ஒருவருக்கொருவர் இது என்ன தேவன் நம்மை நியாயந்தீர்ப்பது? நாம் அனுபவித்த கஷ்டம் அவருக்குத் தெரியுமா? அவர் அந்த கஷ்டங்களை அனுபவித்திருக்கிறாரா? நாம் இருந்த உலகத்தில் அவர் இருந்திருக்கிறாரா? அவர் வாடகை கொடுத்திருக்கிறாரா? வேலைக்குச் சென்றிருக்கிறாரா? தொழில் செய்திருக்கிறாரா? சம்பாதித்திருக்கிறாரா? குடும்ப கஷ்டங்களையெல்லாம் அறிந்திருக்கிறாரா? நம்மைப் போல அநியாயமான, தீமை நிறைந்த உலகத்தில் வாழ்ந்து பிரச்சனைகளையெல்லாம் சமாளித்திருக்கிறாரா? அவர் எங்கேயோ பரலோகத்தில் இருந்துகொண்டு எப்படி மனுஷனை நியாயந்தீர்க்க முடியும்? நம்மை எப்படி தவறு என்று அவர் சொல்லலாம்? நம்மை நியாயந்தீர்க்க அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்று பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது நியாயாசனத்தில் உட்காருவதற்கு ஒருவர் வருகிறார், அவர் மனுஷன். அப்போது திரள் கூட்டமே அமைதியாகி விடுகிறது. ஏனென்றால், இவர் இந்த உலகத்திலே பிறந்து, நம்மைப்போல வாழ்ந்து, ஒரு குடும்பத்திலிருந்தவர், வேலை செய்தவர். நம்மைப்போல எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, பாடுகளை அனுபவித்தவர், அநீதி இழைக்கப்பட்ட மனுஷன். அவர் அத்தனை விதத்திலும் சோதிக்கப்பட்டும் பாவம் செய்யவில்லை, பூரணமான மனுஷனாக இருந்திருக்கிறார். அவர் தான் நியாயந்தீர்க்கப்போகிறார். ஜனங்கள், “கடவுளே, என்னுடைய பிரச்சனை உமக்கு இருந்து, என்னுடைய பாடுகளை நீர் அனுபவித்திருந்தால் நீர் பொய் சொல்லியிருப்பீர், திருடியிருப்பீர். என் கஷ்டம் எனக்குத்தானே தெரியும், நான் வாழ்ந்த உலகத்தில் நீர் வாழ்ந்திருந்தால் நான் செய்த அக்கிரமங்கள் அனைத்தையும் நீர் செய்திருப்பீர், ஏனென்றால் எங்கள் உலகத்தில் அக்கிரமம் செய்யாமல் பிழைக்க முடியாது” என்று அவரிடம் சொல்லலாம் என்று எண்ணி நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய உலகத்தைச் சேர்ந்தவரே அங்கு நின்று கொண்டிருக்கிறார். அவரிடம் இந்த கதையெல்லாம் பேசவே முடியாது. அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால் நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தை தேவன் அவருக்குக் கொடுத்தார். ஆகவே, ஒருவரும் சாக்குபோக்கு சொல்லவே முடியாது.
“அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்” (அப்போஸ்தலர் 10:42).
பேதுரு, இயேசு தான் உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதி என்று அவரைக் குறித்து பிரசங்கம்பண்ணும்படி எங்களுக்கு கட்டளையிடப்பட்டது என்று சொல்லுகிறார்.
“அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்” (மத்தேயு 25:31).
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலே இந்த நியாயத்தீர்ப்பு நடக்கும் என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது.
“மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு,பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்”(அப்போஸ்தலர் 17:31).
அப்போஸ்தலனாகிய பவுல் அத்தேனே பட்டணத்தில் பிரசங்கித்தபோது தன்னுடைய பிரசங்கத்தின் கடைசியில் இப்படியாகச் சொல்லுகிறார்.
“ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும். ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்” (2 கொரிந்தியர் 5:10, 11).
பவுல், நாங்கள் மனச்சாட்சியின்படி வெளியரங்கமாயிருக்கிறோம்,கர்த்தருக்குப் பயந்து நடந்துகொள்கிறோம். ஏனென்றால், நாம் எல்லாரும் ஒருநாள் தேவனுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கப் போகிறோம். நியாயத்தீர்ப்பு நாள் வருகிறது, அங்கு கணக்கொப்புவிக்க வேண்டும். எல்லாம் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நாம் எதையாவது செய்து தப்பித்துக்கொள்ள முடியாது. ஒருவேளை இந்த உலகத்திலிருந்து தப்பித்து விடலாம், ஆனால் தேவனிடத்திலிருந்து தப்ப முடியாது. நியாயத்தீர்ப்பு நாளிலே பதில் சொல்லியே ஆக வேண்டும். எனவேதான் பயந்து வாழ்கிறேன் என்று சொல்லுகிறார். இது ஒரு நல்ல பயம். ஆகவே, நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இப்படி வேதம் நியாயத்தீர்ப்பு வரப்போகிறது என்று திட்டவட்டமாகப் போதிக்கிறது. நியாயத்தீர்ப்பு வரப்போகிறது என்பது எல்லா மனுஷருக்கும் ஏதோ ஒரு விதத்தில் புரிகிறது. எனவேதான் நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்து, அதன் மூலம் அன்பு நமக்குள் பூரணப்படும்போது நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து பயம் உண்டாகாது, மாறாக தைரியம் உண்டாயிருக்கும் என்று வேதம் போதிக்கிறது. ஆக, நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து நமக்கு பயம் இருக்கிறதா அல்லது தைரியம் இருக்கிறதா என்று நம்மை நாமே பரீட்சித்துப் பார்த்தாலே நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது விளங்கி விடும்.
“நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (1 யோவான் 4:17, 18).
பவுல், நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்தால் நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து பயப்பட வேண்டியதில்லை, தைரியமாக இருக்கலாம் என்கிறார். அவர் இதைப் பற்றி மூன்று காரியங்களைச் சொல்லுகிறார். அவிசுவாசியாய் இருக்கிற மனுஷன் நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து பயப்பட வேண்டும். உலகத்தார் நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து பயப்படுகிறார்களா என்று நீங்கள் கேட்கலாம். அநேகர் பயப்படுவதில்லை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். சிலர், நியாயத்தீர்ப்பு நாள் என்பது கிறிஸ்தவப் பிரசங்கியார்கள் நியாயத்தீர்ப்பு நாள் வருகிறது, தேவன் வருகிறார், அவர் நியாயந்தீர்க்கப் போகிறார் என்று சொல்லி ஜனங்களை பயமுறுத்தி வைத்து விட்ட ஒன்று. நியாயத்தீர்ப்பு என்று ஒன்று கிடையாது. நாம் இருக்கிறோம், மரிக்கிறோம், மண்ணோடு மண்ணாகப் போகிறோம். ஆகவே, புசித்து, குடித்து, வெறித்து எப்படி வேண்டுமானாலும் வாழலாம். நாம் மரித்த பிறகு நம் சரீரத்தைப் புதைத்து விட்டால், எல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விடும். அதன் பிறகு நியாயத்தீர்ப்பு என்று ஒன்றுமில்லை, அது ஒரு மூடப்பழக்கம் என்று நம்புகிறார்கள். ஆனால், நாம் மரித்து, சரீரத்தைப் புதைத்த பிறகு எந்தப் பிரச்சனையும் கிடையாது, மறுபடியும்chapterஐ திறக்க மாட்டார்கள் என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது. நியாயத்தீர்ப்புக்கென்று ஒருநாள் நியமிக்கப்பட்டிருக்கிறது என்று வேதம் திட்டவட்டமாகப் போதிக்கிறது. ஆகவே, நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது.
இன்னும் சிலர், நியாயத்தீர்ப்பைப் பற்றி கேள்விப்பட்டது கிடையாது. அவர்கள் அதைப் பற்றி யோசித்துப் பார்த்ததே கிடையாது. அதைப் பற்றிய எந்த அறிவும் அவர்களுக்கு கிடையாது. ஒரு சிறுபிள்ளை நெருப்பைப் பார்த்து பயப்படுவதில்லை. ஏனென்றால், அந்த பிள்ளைக்கு அந்த அளவிற்கு அறிவில் முதிர்ச்சி இல்லை. ஆகவே அது நெருப்பில் கை வைக்கும், உயரத்திலிருந்து கீழே குதிக்கும். தான் அப்படிச் செய்தால் உண்டாகும் ஆபத்துகளும், விளைவுகளும் என்னவென்று அதற்கு புரியவில்லை. எனவே அந்தப் பிள்ளை சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. நாம் தான் கூட இருந்து பிள்ளை விழுந்து விடாதவாறும், எதன் மீதும் மோதி விடாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சிறுபிள்ளைக்கு அந்த அளவிற்கு அறிவில்லை. அதுபோலவே வளர்ந்தவர்கள் அநேகர் நியாயத்தீர்ப்பைக் குறித்த விஷயத்தில் குழந்தைகளாக இருக்கிறார்கள். நான் எங்கிருந்து வந்தேன், எதற்காக இங்கு இருக்கிறேன், என் வாழ்க்கையின் அர்த்தமென்ன என்ற சிந்தனையே இல்லாதவர்களாக இருக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ளுகிறவர்கள் வாழ்க்கை போராட்டமாக இருக்கிறது, இன்றைக்கே கதையை சீக்கிரம் முடித்து விடுவோம் என்று எண்ணி அப்படிச் செய்கிறார்கள். ஆனால், நியாயத்தீர்ப்பு நாளில் மறுபடியும்chapterஐ திறப்பார்கள் என்பதும், அப்போது உனக்குக் கொடுத்த வாழ்க்கையை நீ ஏன் இப்படிச் செய்தாய்? தேவன் உனக்குத் தந்த தாலந்துகளையும், ஆற்றல்களையும், திறமைகளையும் வீணடித்தாயா? தேவன் கொடுத்த வருஷங்களை வேண்டாமென்று நீயே தூக்கி எறிந்து விட்டாயா? நீ என்ன கடவுளா? நீ எப்படி அதைச் செய்யலாம் என கேள்வி கேட்கப்படும் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள்chapterஐ முடித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். அது தவறு!chapterஐ நல்ல விதத்தில் முடிக்க வேண்டும். நியாயத்தீர்ப்பைக் குறித்த பயங்கள் நீங்கி, சந்தோஷமும் சமாதானமும் பெற்று, நியாயத்தீர்ப்பு நாளிலே தேவனுடைய சமுகத்தில் தைரியமாய் நிற்கக்கூடியவர்களாக நாம் மாற வேண்டும். அதுதான்chapterஐ நல்ல விதத்தில் முடிக்கும் விதம். சிலர், சிறுபிள்ளைகளைப் போல சிந்தனையே இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சற்று ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தோம் என்றால் சில காரியங்கள் தெளிவாக விளங்க ஆரம்பிக்கும்.
நன்றாக சிந்திக்கிறவர்களைப் பார்த்தோம் என்றால், அவர்கள் ஆண்டவரைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும் அறியாதவர்களாக இருப்பார்கள். ஆனால், நல்ல அறிவாளிகளாக இருப்பார்கள். அவர்கள் நியாயமாக, நேர்மையாக நடந்து, பாவ வாழ்க்கையை தவிர்ப்பார்கள். ஏனென்றால், சிந்திப்பதினால் உள்ளே மனச்சாட்சி இருப்பது அவர்களுக்குப் புரிகிறது. இது தவறு, இது நியாயமற்றது;இப்படிச் செய்தால் அதற்கு பின் விளைவுகள் இருக்கிறது;நான் என்ன தவறு செய்கிறேனோ அது எனக்கு திரும்ப வந்து விடும்;என் மனச்சாட்சி இதை செய்யக்கூடாது என்று சொல்லுகிறது; ஆகவே என் மனச்சாட்சியின்படி நான் நடந்துகொள்ள வேண்டும் என்று வாழுகிறார்கள். இப்படி இது சரி, இது தவறு என்று அவர்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. அதன்படி அவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
தேவன் நமக்கு மனச்சாட்சியைக் கொடுத்திருக்கிறார். அவர் மனுஷனை நியாயந்தீர்க்கும்போது சிலர், ஆண்டவரே, எனக்கு பழைய ஏற்பாடும் இல்லை, புதிய ஏற்பாடும் இல்லை, பத்து கற்பனைகளும் இல்லை, மலைப்பிரசங்கமும் இல்லை, வேதாகமமும் இல்லை, சபை இல்லை, இயேசுவைப் பற்றி எனக்குத் தெரியாது, என்னை எதன் அடிப்படையில் நீர் நியாயந்தீர்ப்பீர் என்று கேட்டால், அவர்களை மனச்சாட்சியின் அடிப்படையில் அவர் நியாயந்தீர்ப்பார். வேத வசனம் மனுஷனுடைய இருதயத்தில் எழுதப்பட்டதுதான் மனச்சாட்சி. நாம் மனச்சாட்சியின்படி நடந்தாலே பத்து கற்பனைகள், மலைப்பிரசங்கம், வேதத்தின் ஒவ்வொரு காரியங்களையும் பின்பற்றுவோம். தேவன் வேதத்தை எழுதி உள்ளே வைத்து விட்டார். சிலர், மனச்சாட்சி என்று ஒன்றும் கிடையாது, புசித்து, குடித்து, வெறித்து எப்படி வேண்டுமானாலும் வாழலாம், இன்று மரித்தால் கதை முடிந்து விடும். எதைப் பற்றியும் பயப்படாதே, இது சரி, இது தவறு என்று எதுவும் இல்லை. உனக்கு எது சரி, எது தவறு என்று தோன்றுகிறதோ அதன்படி செய், உன் இஷ்டத்திற்குச் செய் என்று சொல்லுகிறார்கள். எது சரி, எது தவறு என்று எதுவும் இல்லையென்றால் ஒருவர் மோசமானவர் என்று எப்படிச் சொல்ல முடியும்? எது சரி, எது தவறு என்று தெரிந்தால்தானே அப்படிச் சொல்ல முடியும். ஆக, எது சரி, எது தவறு என்று ஒரு சட்டம் இருக்கிறது. அது இருக்கிறது என்பது மட்டுமல்லாமல், அது நமக்கும் தெரியும். ஆகவேதான் ஒருவரை மோசமானவர் என்று சொல்லுகிறோம். இன்றைய நவீன காலத்தில் சில மனோவியல் நிபுணர்கள், எது சரி, எது தவறு என்பதையெல்லாம் நம்பக்கூடாது; அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லுகிறார்கள். ஆனால் சற்று சிந்திக்கிறவர்கள், நான் யார், என்னை எப்படி moral nature உடன் தேவன் உண்டாக்கியிருக்கிறார் என்று சிந்தித்து, சரி-தவறு, நியாயம்-அநியாயம் என்று காரியங்கள் இருக்கிறது; அப்படியென்றால் நியாயாதிபதி ஒருவர் இருப்பார், நிச்சயமாக தீர்ப்பு இருக்கிறது, தண்டனை இருக்கிறது, பலன் இருக்கிறது என்று எண்ணி காரியங்களைச் செய்வார்கள்.
“அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” (எபிரெயர் 9:27).
ஆங்கிலத்தில்,“And as it is appointed for men to die once, but after this the judgment”என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மனுஷனுக்கு வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இரண்டுappointment இருக்கிறது. எனக்கு வேண்டாம் என்று சொல்லி எவரும் இதிலிருந்து தப்பவே முடியாது. ஒன்று, மரிப்பது. மனுஷனாய் பிறந்த எவனும் ஒருநாள் மரிக்கும்படியாக அவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. ஒருநாள் நாம் மரிக்கப் போகிறோம், அது மனுஷனுக்கென்று நியமிக்கப்பட்ட ஒரு காரியம். மரித்தவுடன் காரியங்கள் முடிந்து விடவில்லை. மரிப்பது ஒருappointment. அந்தappointment வந்தவுடன் இன்னொருappointment வருகிறது. அது நியாயத்தீர்ப்பு என்கிறappointment. நாம் எல்லாரும் அங்கு நிற்க வேண்டும். மரிப்பதும், நியாயத்தீர்ப்படைவதும் நிச்சயமாக நடக்கப்போகிறது. ஆகவே, அதைப் பற்றி யோசிப்பது நல்லது. அதை யோசிக்கும் இடம் தான் கிறிஸ்தவ சபை.
இரட்சிக்கப்படாத எந்த மனுஷனுக்கும் நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து பயம் இருக்க வேண்டும். அப்படி பயம் இல்லையென்றால் அவன் அதைப் பற்றி யோசிக்காமல், அறிவில்லாமல், அது ஒரு மூடப்பழக்கம் என்று நம்பிக் கொண்டிருக்கிறான். ஆனால், உண்மையாகவே அதைப் பற்றி யோசிக்கிறவன் பயப்படுவான். நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் யார்? எதற்காக பிறந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது? உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்ன? நீங்கள் ஒருநாள் மரிக்கப் போகிறீர்கள் என்பதும், அதற்குப் பிறகு நியாயத்தீர்ப்பு வரப்போகிறது என்பதும், அன்று நீங்கள் விசாரணைக்கு முன்பாக நிற்கப் போகிறீர்கள் என்பதும், புத்தகங்கள் திறக்கப்படப்போகிறது என்பதும், நியாயத்தீர்ப்பு கூறப்படப்போகிறது என்பதும், அதில் தண்டனைகளும் கிடைக்கும், பலன்களும் கிடைக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? வேத வசனம் இதையெல்லாம் போதிக்கிறது.
ஆக முதல் காரியம், ஒவ்வொரு அவிசுவாசியும் நியாயத்தீர்ப்பை எண்ணி நடுங்க வேண்டும். அப்படி நடுங்கவில்லையென்றால் அவன் அறிவில்லாதவன். நியாயத்தீர்ப்பு நடுக்கத்தை உண்டாக்கும். இரண்டாவது, விசுவாசி நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து பயப்படவே கூடாது. இயேசு இந்த உலகத்திற்கு வந்து, மாம்ச ரூபமெடுத்து சிலுவையில் மரித்ததின் நோக்கமென்ன?
“ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்” (எபிரெயர் 2:14, 15).
எல்லா மனுஷரையும் மரண பயத்திலிருந்து விடுதலையாக்கும்படியாகத்தான் இயேசு மாம்ச ரூபமெடுத்து வந்து சிலுவையில் மரித்தார் என்று இங்கு வாசிக்கிறோம். மரண பயம் என்றால் மரிக்கப்போகிறோம் என்கிற பயமல்ல, மரித்த பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதைக் குறித்த பயமாகும். எல்லா அவிசுவாசிக்குள்ளும் நான் மரித்த பிறகு எங்கே போகிறேன்? ஒருவேளை நான் வாழ்க்கையை தவறாக வாழ்ந்து விட்டேனோ? தவறான காரியங்களைச் செய்து விட்டேனோ? இதற்கு கடவுளிடம் நான் பதில் சொல்ல வேண்டுமோ? கடவுள் ஒருவர் இருந்து, நியாயத்தீர்ப்பு என்று ஒன்றிருந்தால் எனக்கு தண்டனையல்லவா கிடைக்கும் என்கிற பயம் இருக்கிறது. அந்த பயத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காகத்தான் இயேசு மாம்ச ரூபமெடுத்து வந்தார் என்று வேதம் சொல்லுகிறது.
யோவான் இதைப் பற்றி குறிப்பான தர்க்கத்தைக் கொடுக்கிறார்.
“நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (1 யோவான் 4:17, 18).
யோவானுடைய தர்க்கம் என்னவென்றால், அன்பும் பயமும் எப்போதும் ஒன்றோடொன்று சேரவே சேராது என்பதுதான். அன்பு இருந்தால் பயம் இருக்காது. பயம் இருக்கிற இடத்தில் அன்பு இல்லை என்றாகி விடுகிறது. பயத்தின் ஆவி அன்பின் ஆவிக்கு முற்றிலும் எதிரானது. அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். ஒரு குழந்தைக்கு ஆளைக் கொல்லும் தொற்றுநோய் வந்து விட்டது. உடனே அந்த குழந்தையின் தாய், இந்தக் குழந்தைக்கு தொற்றுநோய் வந்துவிட்டது, இனி நான் குழந்தையை தொடமாட்டேன், தொட்டால் நான் செத்து விடுவேன் என்று சொன்னால், அது சரி என்று நாம் சொல்லுவோமா? அப்படிப்பட்ட தாயையே நாம் பார்க்க முடியாது. ஒரு தாயானவள் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, இந்த குழந்தைக்கு நான் செய்ய வேண்டியதை செய்யப் போகிறேன் என்று சொல்லி தன்னால் முடிந்த அளவிற்கு அந்த குழந்தையை அரவணைத்து அதற்கு வேண்டிய அத்தனையையும் செய்வாள். குழந்தையை தொடுவதற்கு அந்த தாய்க்கு பயமில்லையா? தொற்றுநோய் அவளை தொற்றிக் கொள்ளாதா? அங்கு பயம் எப்படி புறம்பே தள்ளப்பட்டு விட்டது? அந்த குழந்தையின் மீதிருக்கிற அன்பு பயத்தைப் புறம்பே தள்ளுகிறது. அன்பு வல்லமையுள்ளதாயிருக்கிறது, அது மரண பயத்தை நீக்கிப் போடுகிறது. அந்த தாய் நோய் தொற்றி மரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த தாயார் மரணத்திற்குக்கூட பயப்படுவதில்லை. ஏனென்றால், அன்பு பயத்தைக் காட்டிலும் மிகவும் வலிமையுள்ளதாயிருக்கிறது, அது பயத்தை புறம்பே தள்ளுகிறது. இயேசு சீஷர்களிடம், “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” (மத்தேயு 10:28) என்று சொன்னார். ஏன் இதைச் சொல்லுகிறார் என்றால், சீஷர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது ஒருவேளை துன்புறுத்தப்படலாம், கொல்லப்படலாம். அதற்கு பயப்பட வேண்டாம் என்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் எப்படி பயப்படாமல் சுவிசேஷத்தை பிரசங்கிப்பது? நாம் ஏன் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறோம் என்றால், இந்த சுவிசேஷத்தை நான் நம்புகிறேன், ஆண்டவரை நேசிக்கிறேன், ஆண்டவர் எனக்குக் கொடுத்த வேலை இது, இதை நான் அறிவிக்க வேண்டும் என்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறோம். ஒருவேளை அதினிமித்தம் நமக்கு ஆபத்து நேரிடலாம், நாம் கொல்லப்படலாம் என தெரிந்தும் நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க செல்கிறோம். ஏனென்றால், அன்பு பயத்தைப் புறம்பே தள்ளுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல், “இந்தச் சுவிசேஷத்தை நான் பிரசங்கிக்காவிட்டால் எனக்கு ஐயோ” என்று சொல்லுகிறார். அவரை சிறையில் அடைக்கிறார்கள், அங்கு சென்றும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார். அதைக் கேட்டு அங்குள்ளவர்கள் மனந்திரும்பிவிட்டார்கள். மனுஷரை தேவனிடத்தில் கொண்டு வந்து ஒப்புரவாக்கும் செய்தியை அறிவிக்க தேவனுடைய அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது என்கிறார். இப்படியாக அன்பு பயத்தைப் புறம்பே தள்ளுகிறது. அன்பிற்கு மிகப்பெரிய வல்லமையுள்ளது. ஆகவேதான் யோவான், கிறிஸ்தவர்கள் அன்பினால் நிறைந்து ஒருவரையொருவர் அன்புகூர்ந்தால் அங்கு பயமே இருக்கக்கூடாது என்கிறார். நாம் நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து பயந்து கொண்டிருந்தோமென்றால், நாம் அன்பைப் பற்றி சரியாக புரிந்துகொள்ளவில்லை, அன்பு நம்மை ஆளும்படியாக இடங்கொடுக்கவில்லை என்று அர்த்தம். அன்பு இருந்தால் பயம் புறம்பே தள்ளப்படும்.
ஒரு விசுவாசி எப்படி பயத்திலிருந்து முற்றிலும் விடுதலையாக முடியும்? (1) இயேசு நம்முடைய பாவங்களையும், தண்டனையையும் சுமந்து கொண்டார். நமக்குப் பதிலாளாக சிலுவையில் அவர் மரித்தார். அவர் சிந்தின இரத்தத்தின் மூலமாக நம்மை நீதிமானாக்கி விட்டார். ஆகவே நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து நமக்கு பயமில்லை. (2) அவருடைய பிராயசித்த பலியை நாம் நம்பினதினால் அவருடைய சுபாவம் நமக்கு வந்து விட்டது. அவர் நம்மை மறுபடியும் பிறக்கச் செய்து விட்டார். அவர் இருக்கிறது போல நாம் இந்த உலகத்திலே இருக்கிறோம் என்பது நமக்கு விளங்குகிறது. தினந்தோறும் ஆரோக்கியமான மாற்றங்களை நமக்குள் காண்கிறோம். நாம் இப்போது அவரைப்போல ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பார்க்கும்போது நமக்குள் நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து பயமெல்லாம் நீங்கிப்போய் விடுகிறது. இப்படி அன்பு நம் மூலமாய் வெளிப்படுவதையும், நாம் சத்துருக்களை நேசிக்கிற அன்பை உடையவர்களாய் இருக்கிறோம் என்பதையும் காணும்போது நாம் தேவனுடைய பிள்ளை, நாம் நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து பயப்பட வேண்டியதில்லை, நமக்கு அங்கு தண்டனை இல்லை, மாறாக பலன் தான் காத்துக் கொண்டிருக்கிறது என்கிற ஆறுதலும், நிச்சயமும், தைரியமும் உண்டாயிருக்கிறது.